

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இந்தியளவில் பெரும் பட்ஜெட் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'முத்தின கத்திரிக்கா' படத்தில் நாயகனாக நடித்து தயாரித்திருந்தார். சுந்தர்.சி. இப்படத்தில் நடித்துக் கொண்டே தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார். இப்படத்தின் பணிகள் சுமார் 9 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் நாயகன் மற்றும் நாயகி தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.'நான் ஈ', 'மஹாதீரா’ தற்போது 'பாகுபலி 2' படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய கமலக்கண்ணன் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்ற இருக்கிறார். மேலும், இப்படத்தின் கலை இயக்குநராக சாபு சிரில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தற்போது இதர தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒப்பந்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் சூழலில், படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முதன்முறையாக சுந்தர்.சி இயக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது
இப்படம் குறித்து சுந்தர்.சி அளித்துள்ள பேட்டியில், "இது ஒரு சரித்திரக் கதை. சாபுசிரில் கலை இயக்குநராகவும், கமலக் கண்ணன் கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநராகவும் பணியாற்ற உள்ளனர்.
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோரோடு இப்படத்தில் பணியாற்ற இருப்பதில் சந்தோஷம். முழுமையான கதை முடித்துவிட்டு, கிட்டதட்ட 8 மாதங்கள் பணியாற்றியுள்ளோம். மேலும், இப்படம் முடிவடைய 2 வருடங்களாகும். மற்ற படங்களைப் போல் கதை முடிவானவுடன் படப்பிடிப்புக்கு சென்றுவிட முடியாது. STORY BOARD, GRAPHICS PLANNING உள்ளிட்ட பல விஷயங்கள் இக்கதையில் உள்ளடக்கி இருக்கிறது.
பல கதைகளின் தயாரிப்பு செலவில் நடிகர்களின் சம்பளம் பெரும் தொகையாக இருக்கும். ஆனால் இக்கதை தயாரிப்பு செலவே மிகவும் பெரியது. கண்டிப்பாக இந்திய அளவில் பெரும் பொருட்செலவாக இருக்கும். அமெரிக்கா, டென்மார்க், இங்கிலாந்து, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்திருக்கிறார் சுந்தர்.சி