

விரைவில் விஜய் நடிக்கும் படத்தினை இயக்கவிருப்பதாக வந்த செய்தியினை உறுதி செய்த இயக்குநர் சசிகுமார்.
தற்போது விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து விஜய் யாருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது.
நேசன், சசிகுமார் ஆகியோர் விஜய்யை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று சசிகுமார் கலந்து கொண்ட டி.வி ஷோ ஒன்று ஒளிபரப்பட்டது. அதில் 'மாஸ் படம் எடுக்கணும் முடிவு பண்ணிட்டீங்க. செம மாஸ். ஷாட் பை ஷாட் மாஸ் தான். இவங்கள்ல யாரு ஹீரோ சாய்ஸ்.. தளபதியா தலயா?' என்று சசிகுமாரிடம் கேட்டார்கள்.
அதற்கு சசிகுமார், "என்கிட்ட ஒரு கதை இருந்தது. விஜய் சாருக்கு தான் அந்த கதை சரியா இருக்கும்னு நினைச்சு அதை விஜய் சார்கிட்ட சொல்லிருக்கேன். அந்த கதை அவருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அதை எப்போ பண்றோம் அப்பிடிங்கிறது தெரியாது. கால நேரம் வரும்போது பண்ணுவோம் " என்று பதிலளித்தார்.
சசிகுமாரிடம் விஜய் கதை கேட்டுவிட்டதால், சிம்புதேவன் படத்தினைத் தொடர்ந்து விஜய் சசிகுமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைப் போலவே இயக்குநர் நேசனிடமும் தனக்காக ஒரு கதை தயார் செய்யுமாறு கூறியிருக்கிறார் விஜய்.