

அஜித் படத்தை இயக்குவேனா என்ற கேள்விக்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பதிலளித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நேரம்'. 2013ம் ஆண்டு மலையாள பதிப்பு மே 10ம் தேதியும், தமிழ் பதிப்பு மே 17ம் தேதியும் வெளியானது.
'நேரம்' வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதையொட்டி, அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார். அப்போது அஜித் ரசிகர் ஒருவர் "அஜித் படம் இயக்குவீர்களா" என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், "நானும் எனது நண்பன் ஐபி கார்த்திகேயனும் 3 மணி நேரம் தல அஜித் குமாரின் வீட்டின் முன் காத்துக் கிடந்தது நினைவில் இருக்கிறது. இது நடந்தது 9-10 வருடங்களுக்கு முன்.
நுங்கம்பாக்கம் எஸ்.ஏ.ஈ கல்லூரியில் நான் படித்தபோது. அப்போதும் அவரை சந்திக்க முடியவில்லை, இப்போதும் முடியவில்லை. இந்த காத்திருப்பு ஒரு சிறந்த படத்துக்கானதாகக் கூட இருக்கலாம். அவருடன் இணைந்து பணியாற்ற சரியான நேரத்துக்காக நான் காத்திருப்பேன்.
அவரைப் போன்ற ஒரு சிறந்த நடிகரைக் கையாள, ஒரு இயக்குநராக நான் இன்னும் தயாராகவேண்டும் என நினைக்கிறேன். அவருக்காக நான் எழுதிய கதை, 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா' என்ற படத்தைப் பார்த்ததும் அவ்வளவு சுவாரசியமாக இல்லை.
எனது கதை, அந்தக் கதையின் படு மோசமான வடிவமாக இருந்தது. அதனால் அந்த யோசனையை தூக்கிப் போட்டுவிட்டேன். அந்த படத்தின் தலைப்பு, ஆப்பு - 100 பெர்சண்ட் ரிட்டர்ன் கேரண்டி" என்று பதிலளித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்