இயக்குநர்களின் முதல் கதாநாயகன் தயாரிப்பாளர்கள் தான்: இயக்குநர் பொன்.ராம்

இயக்குநர்களின் முதல் கதாநாயகன் தயாரிப்பாளர்கள் தான்: இயக்குநர் பொன்.ராம்
Updated on
1 min read

இயக்குநர்களின் முதல் கதாநாயகன் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் என்று இயக்குநர் பொன்.ராம் தெரிவித்தார்.

ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கியுள்ள ஆல்பம் 'ஒரு காதலின் புதுப்பயணம்'. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பொன்ராம் வெளியிட மைம் கோபி, பிரஜின், நிஷாந்த் உள்ளிட்ட பலர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசியது, "குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு தரமுடியவில்லை. அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பதுசாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு கதாநாயகன்- ஹீரோ எல்லாமே. அதை மறந்து விடக் கூடாது. இந்த நான்கு நிமிட பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். நல்ல வேளை இரண்டு முறை போட்டார்கள். அதற்குள் பாடல், கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன.

இதுமாதிரி ஆல்ப முயற்சி தன்னை சோதித்துக் கொள்ளும் ஒரு முயற்சிதான். எஸ்.எம் எஸ்.ராஜேஷ் கூட ஒரு காட்சியை மாதிரிக்கு எடுத்துக் காட்டி விட்டுத்தான் படவாய்ப்பை பெற்றார். இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்" என்று பேசினார்.

இவ்விழாவில் இயக்குநர் குமரன் பேசும் போது, "நான் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டது இந்த ஒரு நாளுக்காகத்தான். கல்லூரிப் படிப்பு முடிந்து உதவி இயக்குநராகவும் முடியாமல் இருந்த போது என் அம்மா, அப்பா இருவருமே பிடிச்சதை நீ பண்ணுடா நாங்க உனக்கு உதவி செய்கிறோம் என்றார்கள். அதை என்னால் மறக்க முடியாது 'வயோல்'குறும்படம் நிறைய விருதுகள் பெற்றது .

இந்த ஆல்பத்தைத் தயாரிக்க முன் வந்த ரெஜினா பிக்சர்ஸ் ரெக்ஸை மறக்க முடியாது. நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி இருவரையும் எதுவுமே தெரியாமல் வாருங்கள் என்றுதான் கூப்பிட்டேன். அப்படி வந்து இப்படி அழகாக நடித்துவிட்டார்கள். பூஜையே போடாமல் என் அடுத்த படம் இந்த ஆல்ப அறிவிப்புடன் தொடங்கி விட்டது. அதற்கு உழைக்க இந்த நிமிடத்திலிருந்தே தொடங்கி விட்டேன்.''என்றார்.

ஆல்பம் வெளியீட்டு விழாவிலேயே இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அனாமிகா பிக்கர்ஸ் சார்பில் 'பழைய வண்ணாரப் பேட்டை' படத்தை விநியோகம் செய்த இளைய அரசன் ஹன்சிகா எண்டர் டெய்ன் மெண்ட்ஸ் சார்பில் புதிய படத்தைத் தயாரிக்கிறார். குமரன் இயக்கத்தில் பிரஜின் ,நிஷாந்த் நடிக்க உருவாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in