Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

‘மங்காத்தா-2 கதை தயாரா இருக்கு’

கோலிவுட்டின் பரபரப்பான தயாரிப்பாளர்களில் ஒருவர் தயாநிதி அழகிரி. ‘வடகறி’, ‘தகராறு’, ஜெய் - மணிமாறன் கூட்டணியில் ஒரு படம், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் ஒரு படம் என்று காலில் சக்கரத்தை கட்டிக்கொள்ளாத குறையாக சினிமா உலகில் பரபரப்பாய் திரிந்துகொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.

நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு எல்லாரும் எதிர்பார்த்து இருந்தப்ப, திடீர்னு சினிமா தயாரிப்பாளரா அவதாரம் எடுத்துட்டீங்க. தயாரிப்பாளர் ஆகிற ஆசை எப்படி வந்தது?

நான் தயாரிப்பாளர் ஆனதே எதேச்சையானது தான். நான் அனைத்து மொழிப் படங்களையும் பார்ப்பேன். இயக்குநர் கெளதம் மேனன் என் நண்பர். ‘வாரணம் ஆயிரம்’ படத்தை நான் ஏன் தயாரிக்கக் கூடாது என்று கேட்டார். எனக்கும் அதை தயாரித்தால் என்ன என்று தோன்றியது. அப்பாவிடம் கேட்க, அவரும் சம்மதித்தார்.

உடனே இறங்கிவிட்டேன். ஒரே நாளில் ‘க்ளவுட் நைன்’ லோகோவைத் தயார் செய்தேன். இது திடீரென்று முடிவான விஷயம். மற்றபடி தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்று எனக்கு கனவெல்லாம் கிடையாது. ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் ஆரம்பித்த வெற்றி இன்றும் தொடர்கிறது. அவ்வளவுதான். அது இனியும் தொடரும்.

தயாரிப்பாளராக ஒரு படத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

முதல் விஷயம் எனக்கு கதை பிடிச்சிருக்கணும். ஏதாவது வித்தியாசமா இருந்தா, பண்ணலாமேனு இறங்கிடுவேன். சரியா போகாதுன்னு எல்லாருமே தயங்கின படம் ‘தமிழ் படம்’. ஆனா, எனக்கு அந்த படத்து மேல நம்பிக்கை இருந்தது. உடனே ரிலீஸ் பண்ணினேன், படம் பயங்கர ஹிட். கதை நல்லாயிருந்தா, மக்கள் எந்த மாதிரியான படங்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது என் நம்பிக்கை.

'வடகறி'ங்கிற படத்துல சன்னி லியோன் நடிப்பது பற்றி ஒரே பரபரப்பா இருக்கே. அவங்க என்ன கேரக்டர்ல நடிக்கிறாங்க?

அவங்க நடிக்கல. ஒரு பாட்டுக்கு டான்ஸ் மட்டும் ஆடுறாங்க. அவ்வளவு தான். 'வடகறி' படத்துக்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருக்கு. ஏதாவது ஒரு முன்னணி நாயகியை ஒரு பாட்டுக்கு ஆட வைச்சா இன்னும் எதிர்பார்ப்பு கூடும்னு நினைச்சோம். ‘மன்மதன்’ல யானா குப்தா, ‘ஒஸ்தி’ல மல்லிகா ஷெராவத்னு சில படங்களில் முன்னணி நடிகைகளை ஆட வச்சதால எதிர்பார்ப்பு அதிகமா இருந்தது. அதே போல இந்த படத்துலயும் முன்னணி நடிகை ஒருத்தரை ஆட வைக்கலாம்னு யோசிச்சோம்..

‘ஜிஸிம் 2’ங்குற இந்தி படத்துக்கு பெரியளவில் ஓப்பனிங் இருந்ததுக்கு காரணம் சன்னி லியோன். சன்னி லியோனை ஆட வைச்சா என்னனு கேட்டேன். சூப்பர்னு சொன்னாங்க. உடனே அவங்களோட மேனேஜர்கிட்ட பேசி ஒப்பந்தம் பண்ணினோம்.

சன்னி லியோன் ஒரு நீலப்பட நடிகை. அதனால அவங்க தமிழ் படத்துல ஆடக்கூடாதுன்னு எதிர்ப்பு கிளம்பி இருக்கே?

ஏங்க.. நாங்க என்ன சன்னி லியோனை வைச்சு நீலப்படமா எடுக்குறோம், சொல்லுங்க. அவங்க ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க அவ்வளவு தான்.

‘மங்காத்தா’ படத்தோட இரண்டாம் பாகத்தை பற்றிய செய்திகள் வெளியாகிட்டு இருக்கே. அது சாத்தியமா?

‘மங்காத்தா 2’ம் பாகத்தை பத்தி பேசிட்டு இருக்காங்கன்னா அதுக்கு காரணம் ‘மங்காத்தா’ படத்தோட பிரம்மாண்ட வெற்றி தான். ‘மங்காத்தா’ படத்தை இன்னும் மக்கள் மறக்கல. அதை இப்போவே அழிச்சிடக் கூடாது அப்படிங்கிறதுல உறுதியா இருக்கேன்.

‘மங்காத்தா 2’ வரும், வரலாம். அதைப்பத்தி நாங்க இன்னும் பேச ஆரம்பிக்கல. ஆனா, வெங்கட்பிரபு, ‘மங்காத்தா 2’ க்கான கதையை தயாரா வெச்சிருக்கார்.

அஜீத் கூட இருக்குற நட்பைப் பத்தி சொல்லுங்க?

அஜீத் அப்படின்னாலே மாஸ்தான். லோக்கல் தியேட்டர்ல எல்லாம் படம் போடுறதுக்கு முன்னாடி வேற படத்தோட பாட்டு போடுவாங்க. அப்போ, எல்லாம் படம் வேறொரு நடிகரோட படமா இருக்கும். ஆனா, அந்த படத்துக்கு முன்னாடி அஜீத் பாட்டு போட்டங்கன்னா, படத்தோட ஒப்பனிங் சீனுக்கு இருக்குற விசில் சத்தத்தை விட அஜீத் பாட்டுக்கு சும்மா விசில் பறக்கும். ஏன்னா, தமிழ் சினிமாவில் மாஸ் அப்படின்னாலே அஜீத் தான்.

உங்களது தயாரிப்பில் பெரிய பட்ஜெட் படங்கள் கம்மியா இருக்கே. என்ன காரணம்?

என்னோட பேனர்ல இருந்து படங்கள் வந்தா மக்களுக்கு பிடிக்கணும், அவ்வளவு தான். பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் படங்கள் அப்படியெல்லாம் கிடையாது. கதை நல்லாயிருந்தா பெரிய பட்ஜெட் படமும் பண்ணுவோம். என்னைப் பொறுத்தவரை படம் ஹிட்டாகணும், அதைத்தான் எதிர்பாக்குறேன்.

உதயநிதி, அருள்நிதி எல்லாம் நடிச்சுட்டு இருக்காங்க. எப்போ நடிகர் தயாநிதியை பாக்குறது?

நிறைய பேர் இதே கேள்வியைக் கேட்குறாங்க.. எனக்கு அந்த எண்ணமில்லை. தயாரிப்பாளரா இருந்தா மட்டும் போதும்னு நினைக்கிறேன். உதயநிதி நடிச்ச 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பெரிய ஹிட். இப்போ வரைக்கு அந்த படத்தைப் பத்தி பேசுறோம்.

அருள்நிதி நடிச்ச 'மெளனகுரு'வுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது. இப்போது 'தகராறு' படத்துல பிரமாதமாக பண்ணியிருக்கார். அவங்களோட வேலைல அவங்க நல்லா பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு தயாரிப்பு மட்டும்தான் தெரியும். அதனால, அதுல எனக்கு தெரிஞ்சத பண்ணிட்டு இருக்கேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x