

தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 'ரெமோ' அக்டோபர் 7ம் தேதி வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலை ஜூன் 23ம் தேதி இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட 'ரெமோ' ட்ரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
இப்படத்தின் விநியோக உரிமையை முன்னணி விநியோகஸ்தர்கள் எம்.ஜி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்கள். இதனால் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என தெரிகிறது.
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, அக்டோபர் 7ம் தேதி வெளியீட்டை படக்குழு இறுதி செய்திருக்கிறது.