

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தாய்லாந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
3 கெட்டப்களில் நடித்து வரும் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா மற்றும் சனாகான் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்கள். 3 கெட்டப்பகளில் 'மதுரை மைக்கேல்' கெட்டப் மட்டும் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. 'அஸ்வின் தாத்தா' கெட்டப்பின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும், இதன் படப்பிடிப்புக்காக தாய்லாந்துக்கு சென்று படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வந்தது படக்குழு. சிம்பு உள்ளிட்ட படக்குழுவினரும் தாய்லாந்து சென்றிருந்தார்கள். ஆனால், மற்ற நடிகர்களின் தேதி பிரச்சினைக் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
அக்காட்சிகள் அனைத்தையும் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதோடு 'அஸ்வின் தாத்தா' கெட்டப்புக்கான படப்பிடிப்பு முடிக்கப்பட்டு விரைவில் அடுத்த கெட்டப்புக்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதில் சிம்புவுக்கு நாயகியாக சனாகான் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தொடர்பாக வெளியாகியுள்ள 2 டீஸர் மற்றும் 1பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.