

மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள் விடுத்திருப்பதற்கு சமூகவலைதளத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துள்ளார். சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரோடு கூடிய திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரையுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வுகள் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வருகிறார். தற்போது "Rajbhavantamilnadu@gmail.comங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலாக அனுப்புங்க. மரியாதையா பேசணும். அது சட்டப்பேரவை அல்ல. ஆளுநர் வீடு" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்.
இதற்கு திரையுலகினர் பலரும் கமல் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், கமலின் வெளிப்படையான கருத்துக்கு சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
"மோடிக்கு மட்டும் வாழ்த்து சொல்ற நடிகர் மத்தியில் தமிழனுக்கு ஒண்ணுனா வர கமல் க்ரேட்", "மெரினா வாங்க மக்கள் நம்ம ஒண்ணு கூடுவோம்", "வேற லெவல் சார்", "எந்த நடிகனும் வாய்திறக்க பயப்படும்போது அவர் தைரியமா பேசுறாரே அதுவே போதும்" என்று பலரும் கமலின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளனர்.