

’ரொம்ப அறிவாளியாக இருக்காதே.. வாழ்க்கை போராடிக்கும்’ என்று நடிகர் தனுஷுக்கு நடிகர் கார்த்திக் அறிவுரை கூறியிருக்கிறார்.
'மாற்றான்' படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் நடிகர் ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. தற்போது தனுஷ் நாயகனாக நடிக்கும் 'அனேகன்' படத்தினை அவர் இயக்கிவருகிறார்.
'அனேகன்' படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 'மாற்றான்' படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. நாயகியாக ஏமிரா நடிக்கிறார். கார்த்திக் இப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
தனுஷ், ஏமிரா, கார்த்திக் உடன் அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, புதுச்சேரி, வியட்நாம், மலேசியா, கம்போடியா, பொலிவியா உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது.
இப்படத்தின் புதுச்சேரி படப்பிடிப்பில் தனுஷ், ஏமிரா, கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். அப்போதுதான் தனுஷிற்கு கார்த்திக் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும்போது, “இன்று கார்த்திக் சாருடன் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். கெளதம் கார்த்திக்கின் சகோதரர் போல் உள்ளார். 'ரொம்ப அறிவாளியாக இருக்காதே.. வாழ்க்கை போரடிக்கும்' என்று அறிவுரை வழங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
'அனேகன்' படத்தில் நடித்துக்கொண்டே ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.