

பொங்கலுக்கு 'கோச்சடையான்' வெளியாகுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
பொங்கல் ஜல்லிக்கட்டில் 'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்களைத் தொடர்ந்து இறுதியாக போட்டியில் பங்கேற்ற படம் 'கோச்சடையான்'.
'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கின்றன. டிசம்பர் 7ம் தேதி 'வீரம்' பாடல்களும், 'ஜில்லா' படத்தின் பாடல்கள் டிசம்பர் 15ம் தேதியும் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
'கோச்சடையான்' படத்தின் பணிகள் எந்தளவில் இருக்கின்றன என்பதை படக்குழு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது. டிசம்பர் 12 - ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீடும், பொங்கல் 2014ல் படமும் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
டிசம்பர் 15ம் தேதி தான் 'கோச்சடையான்' படத்தின் FIRST COPY தயாராகுமாம். அதற்குப் பிறகு பொங்கல் வெளியீட்டிற்கு விநியோக உரிமை, திரையரங்கு ஒப்பந்தம் என்பது சாத்தியமில்லை என்கிறார்கள். ஏனென்றால், 'ஜில்லா' படத்தின் விநியோக உரிமை முடிந்து, திரையரங்க ஒப்பந்தம் தொடங்கிவிட்டது. 'வீரம்' படத்தின் விநியோக உரிமை இந்த வாரத்திற்குள் முடித்து, திரையரங்கு ஒப்பந்தத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'வீரம்', 'ஜில்லா' ஆகிய படங்கள் முக்கிய திரையரங்குகள் அனைத்தையுமே ஒப்பந்தம் செய்துவிட்டால், 'கோச்சடையான்' படத்தின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் படத்தினை 2 வாரம் கழித்து வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள்.