​நாம் உண்ணும் உணவில் நச்சுப் பொருட்கள் கலந்துவிட்டன: ஆரி கவலை

​நாம் உண்ணும் உணவில் நச்சுப் பொருட்கள் கலந்துவிட்டன: ஆரி கவலை
Updated on
1 min read

நாம் உண்ணும் உணவில் நச்சுப் பொருட்கள் கலந்துவிட்டன என்று அன்னையர் தினத்தில் பேசும் போது ஆரி குறிப்பிட்டார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கரணையில் உள்ள 'இதய வாசல்' முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கி அவர்களோடு உணவு உட்கொண்டார். மேலும் அவர்களுக்கு இயற்கை உரங்களின் மூலமாக காய்கறி தயாரிக்கும் மாடித் தோட்டம் திட்டத்தை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஆரி பேசியதாவது:

"நான் சென்ற வருடம் அன்னையோடு இருந்தேன். ஆனால் இந்த வருடம் என் அன்னை என்னை விட்டுச் சென்று விட்டார். இளைஞர்களே தாய் தந்தையை அனாதையாக விட்டு விடாதீர்கள் அவர்கள் நம் பெற்றோர்கள்.

எல்லோரும் இயற்கை உணவு சாப்பிடுங்கள். 'உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பெப்சி, கோக் போன்ற அனைத்து குளிர்பானங்களையும் தவிர்த்து எதிர்த்து குரல் கொடுங்கள். இயற்கையான மோர், இளநீர், கரும்புச் சாறு,நொங்கு, எலுமிச்சை பழ நீர் மற்றும் இஞ்சி டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்துங்கள்.

நாகரிகம் என்ற பெயரில் விருந்தினர்களுக்கு நச்சு கலந்த குளிர் பானங்கள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள் . எல்லா உணவு வகைகளிலும் நச்சுப் பொருட்கள் கலந்துவிட்டன. எனவே இயற்கை உரங்களின் மூலம் காய்கறிகளை நம் வீட்டு மொட்டை மாடியில் தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை இன்று இந்த முதியோர் இல்லத்தில் அறிவிக்கிறேன். இந்த இல்லத்தில் இருந்தே துவங்க உள்ளோம். இப்படி நம் வீட்டுற்கு மட்டுமாவது இயற்கை உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தை முதியோர் இல்லத்தில் துவங்கக் காரணம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்றுதான் .மேலும் சென்னையில் உள்ள அனைத்து முதியோர் மற்றும் ஆதரவற்ற இல்லத்திலும் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் அனைத்து குடியிருப்பு பகுதியிலும் இத்திட்டம் தொடர ஊக்கப்படுத்துவோம்.

நமது உணவு வகையில் சில மாற்றம் வேண்டும். பாலீஷ் போட்ட அரிசி தவிருங்கள், பட்டை தீட்டாத அரிசியை பயன்படுத்துங்கள். பாக்கெட் பால் தவிருங்கள், நல்ல இயற்கையான பாலை அதன் தயிர் மோர் போன்றவற்றை பயன் படுத்துங்கள். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துங்கள். வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து பனங்கற்கண்டு பனங்கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, தேன் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மைதாவை தவிருங்கள். கல் உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள் . இப்படி நாம் உண்ணும் உணவில் மாற்றமே நம் ஆரோக்கியத்திற்கான மாற்றம்" என்று பேசினார் ஆரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in