

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் படத்தில் நாகார்ஜுன் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் கார்த்தி.
'பிருந்தாவனம்' மற்றும் 'ஏவடு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வம்சி பைடிபாலி. பி.வி.பி சினிமாஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். அப்படத்தில் முதலில் நாகார்ஜுன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் தரப்பில் இருந்து இதனை உறுதிப்படுத்தவில்லை. தற்போது ஜூனியர் என்.டி.ஆர் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நாகார்ஜுன் உடன் ஜூனியர் என்.டி.ஆர் வேடத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இச்செய்தியினை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் மற்றும் தெலுங்கில் இரு முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிப்பதை பெருமையாக கருதுகிறோம். நாகார்ஜுன் மற்றும் கார்த்தி நடிக்க இருக்கும் மெகா பட்ஜெட் படத்தை வம்சி பைடிபாலி இயக்கவிருக்கிறார். விரைவில் இருவருடன் வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு என்பது முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.