

'எதிர் நீச்சல்' இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கும் 'டாணா' என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் நாயகனாகிறார் சிவகார்த்திகேயன்.
2013ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்கள் பட்டியலில் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் பெயர் இடம்பெறும். 'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வசூலை அள்ளியது.
இந்நிலையில் 2014ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மான்கராத்தே' படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைக்க, ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார்.
'மான்கராத்தே' படத்தின் விநியோக உரிமைக்கு கடும் போட்டி நிலவி, அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்தன. இப்படத்தின் வியாபாரத்தை பார்த்து பல்வேறு முன்னணி நடிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
'மான்கராத்தே' படத்தைத் தொடர்ந்து 'எதிர்நீச்சல்' படக்குழு மீண்டும் இணைகிறது. 'டாணா' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தினை தனுஷ் தயாரிக்க, துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக ஆக்ஷன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன் என்பது தான் ஹைலைட்.