

விஷால் நடிப்பில் 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கிவிட்டு, பிறகு அல்லு அர்ஜூன் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சண்டக்கோழி'. 2005ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.
இப்படத்தின் 2ம் பாகம் மூலமாக மீண்டும் இணைய இயக்குநர் லிங்குசாமி - விஷால் முடிவு செய்தார்கள். ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 'சண்டக்கோழி 2' கைவிடப்படுவதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
தற்போது இயக்குநர் லிங்குசாமி - விஷால் இருவரும் பேசி பிரச்சினைகளைப் பேசி முடித்து மீண்டும் இணைய முடிவு செய்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன் படத்துக்கு முன்பாகவே, இப்படம் தொடங்க இருக்கிறது. யுவன் இசை, மதி ஒளிப்பதிவு என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
'சண்டக்கோழி' படத்தில் விஷாலின் அப்பாவாக ராஜ்கிரண் இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் நாயகி மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.