

சந்தோஷ்சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘இனம்’ படத்தில் 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
இலங்கை போராட்ட பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவான ‘இனம்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்தப் படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிதைக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் படத்தை தடை செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. தொடர்ந்து எதிர்ப்பு எழுந்ததால் படத்தில் 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி கூறியதாவது:
சில இடங்களில் படத்தை வெள்ளிக் கிழமை திரையிடுவதில் தடங்கள் ஏற்பட்டது. படத்தை எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை.
‘இனம்’ படத்தில் ஒரு இடத்தில் புத்தபிக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக அந்த வழியே வரும் நாயகி மற்றும் குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சியும், எல்டிடிஈ தொடர்பான காட்சியும் நீக்கப்பட்டன. மொத்தம் 3 நிமிட காட்சிகளை வெள்ளிக்கிழமை இரவுக் காட்சி முதல் நீக்கியுள்ளோம் என்றார்.
படத்தில் நீக்கப்பட்டுள்ள காட்சிகளின் விவரம்:
* பள்ளிக்கூடக் காட்சி
* புத்துமதத் துறவி தமிழ்க்குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி
* சிங்கள ராணுவத்தான் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி
* தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம்
* படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்