

சமூக வலைதளமான ட்விட்டர் தளத்திலிருந்து தனது கணக்கை முடக்கி(Deactivate) வெளியேறினார் நடிகர் விஷால்.
தமிழ் திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் ட்விட்டர் தளத்தில் கணக்குகள் ஆரம்பித்து, ட்வீட் செய்து வருகின்றனர். ட்விட்டரில் புதிய படங்கள் ஒப்பந்தம், படப்பிடிப்பு தளம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் நிலவும் விவசாயிகள் மரணம், ஜல்லிக்கட்டு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னணி நடிகர், நடிகைகள் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்த நடிகர்களில் விஷாலும் ஒருவர்.
ஆனால், அவர் கூறிய கருத்துகள் யாவும் தவறாக சித்திரிக்கப்பட்டு செய்திகளாக பல்வேறு இணையங்களில் வெளியானதாக விஷால் கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக தமிழக காவல்துறையிடமும் விஷால் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையால் இனிமேல் சமூக வலைதளத்தில் இடம்பெறப் போவதில்லை என்று முடிவு எடுத்து, தன்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு வெளியேறியுள்ளார் விஷால்.
இதே போன்றதொரு விவகாரத்தில் த்ரிஷாவும் தன்னுடைய ட்விட்டர் கணக்கை உதறிவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.