

பாலா இயக்கத்தில் உருவாகிவரும் 'நாச்சியார்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராக்லைன் வெங்கடேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து ஜோதிகா - ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் பாலா. இதனை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
'நாச்சியார்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளத்தில் சூர்யா வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் செப்டம்பரில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களைத் தயாரித்தவர். தமிழில் இவர் நடிக்கும் முதல் படமாக 'நாச்சியார்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.