

யூடியூப் தளத்தில் விஜய், அஜித் படங்களின் டிரெய்லர் பார்த்தவர்களின் எண்ணிக்கையை எல்லாம் தாண்டிவிட்டது 'கோச்சடையான்' டீஸர் பார்த்தவர்களின் எண்ணிக்கை.
ஒரு படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் தான் படத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை தீர்மானிப்பது. அதுமட்டுமன்றி டிரெய்லர் மக்களை கவர்ந்து விட்டால், படத்தின் ஓப்பனிங் வார வசூலுக்கு பஞ்சம் இருக்காது.
அந்த வகையில் படங்கள் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது படத்தின் டீஸர், இசை வெளியீட்டு விழாவின் போது படத்தின் டிரெய்லர் ஆகிவற்றை படத்தின் பெயரில் யூடியூப் தளத்தில் கணக்கு ஒன்றை ஆரம்பித்து பதிவேற்றம் செய்வார்கள். அல்லது படத்தின் ஆடியோ நிறுவனத்தின் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.
தற்போது 'கோச்சடையான்' படத்தின் டீஸரை இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதால், அது முதல் இடத்தினை பிடித்திருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' டிரெய்லரை இதுவரை 34 லட்சம் பேரும், 'தலைவா' படத்தின் டிரெய்லரை 33 லட்சம் பேரும், அஜித் நடிப்பில் வெளியான 'ஆரம்பம்' டீஸரை 21 லட்சம் பேரும், டிரெய்லரை 24 லட்சம் பேரும் கண்டுகளித்து இருக்கிறார்கள். விஜய், அஜித் படங்களுக்கு இணையாக 'ராஜா ராணி' படத்தின் டிரெய்லரையும் 24 லட்சத்திற்கு அதிகமானோர் கண்டுகளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அஜித்தின் 'வீரம்' இடம்பெறவில்லை. ஏனென்றால் அப்படத்தின் டிரெய்லர் சன் டி.வியில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலரும் யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதால் கணக்கில் எடுத்துக் கொள்ள இயலாது.
'கோச்சடையான்' படத்தின் டீஸருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டை மார்ச் 2ம் வாரத்தில் வைத்துக் கொள்ள தீர்மானித்திருக்கிறார்கள். இதுவரை 4 முறை ஒத்திவைத்துள்ளதால் இம்முறை வெளியிட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
ஏப்ரல் 11ம் தேதி கண்டிப்பாக 'கோச்சடையான்' வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு. பார்க்கலாம்!