

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சென்னையில் ரசிகர்களை திங்கள்கிழமை சந்தித்தார். தீபாவளிக்கு திரைக்கு வந்த ‘கிரிஷ் 3’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த சந்திப்பு இருந்தது.
நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன், அவரது தந்தையும் இயக்குநருமான ராகேஷ் ரோஷன், படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.திரு ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஹிருத்திக் ரோஷன் கூறுகையில், “கிரிஷ் 3 படத்துக்கு சென்னையில் இவ்வளவு எதிர்பார்ப்பு இருப்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தின் என்னுடைய சூப்பர் ஹீரோ கேரக்டரை எந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதே மனநிலையில்தான் நானும் ரசித்து நடித்தேன்.
தமிழ் கதாபாத்திரங்களை என் அடுத்தடுத்த படங்களில் வைக்கவுள்ளேன். ரசிகர்கள் விரும்பினால் தமிழ்ப் படங்களிலும் நடிப்பேன்” என்றார்.
ராகேஷ் ரோஷன் பேசுகையில், “பொதுவாக பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் வெளியாகும்போது, வெளியான சில நாட்களிலேயே திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். கிரிஷ் 3 ரிலீஸின் போது தமிழ்நாட்டில் 68 திரையரங்குகளில் வெளியிட்டோம். இப்போது அது அதிகரித்து 90க்கு மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
படத்தை ‘3டி எபெக்ட்’டில் எடுக்க வேண்டும் என்றால் மிகுந்த கவனத்துடன் எடுக்க வேண்டும், அதிக நேரம் செலவிட வேண்டும். அதற்கு போதுமான நேரம் இல்லாமல் போனதால் எடுக்கமுடியவில்லை!’’ என்றார்.
ஒளிப்பதிவாளர் எஸ்.திரு கூறுகையில், “அதிகாலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிட்டு காலை 8 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்துவிடுவார், ஹிருத்திக். அந்த அளவுக்கு ஈடுபாடு கொண்டவர். இந்த படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது!’’ என்றார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகள் பலரும் முகத்தில் ‘கிரிஷ் 3’ சூப்பர் ஹீரோ முகமூடியை அணிந்திருந்தனர்.