

அஜித், விஜய் ஆகிய நடிகர்களின் தேதிகள், என்னோட தேதிகள், கதை என அனைத்துமே ஒத்துப் போனால் இயக்கத் தயாராக இருப்பதாக இயக்குநர் ஹரி கூறினார்.
விஷால், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'பூஜை' படத்தை இயக்கி இருக்கிறார் ஹரி. விஷால் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். தீபாவளி வெளியீடாக இப்படம் வெளிவர இருக்கிறது.
"யு/ஏ சான்றிதழ் வாங்கியிருந்தாலும் பரவாயில்லை.. எனக்கு படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. எதையும் கட் பண்ண வேண்டாம்" என்று விஷால் கூறிவிட்டதாக இயக்குநர் ஹரி தெரிவித்தார்.
தீபாவளி வெளியீடாக தான் இயக்கியிருக்கும் 'பூஜை' வெளிவர இருப்பதால் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குநர் ஹரி. பத்திரிகையாளர்கள் மத்தியில் இயக்குநர் ஹரி பேசியது, "இதுவரை 12 படங்களை இயக்கி இருக்கிறேன். எனது 13வது படமாக 'பூஜை' வெளிவர இருக்கிறது. தொடர்ச்சியாக எனது படங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி.
தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று பெயர் வாங்கியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை வெளிவந்த அனைத்து படங்களையுமே சொன்ன தேதியில் முடித்து கொடுத்திருக்கிறேன். 'பூஜை' படத்தின் போது நாயகனே தயாரிப்பாளராக இருக்கிறாரே சரியாக வருமா என்ற சந்தேகம் இருந்தது.
100 நாட்கள் ப்ளான் பண்ணி, 90 நாட்களில் முடித்து விட்டோம். ஏனென்றால் நாயகனே தயாரிப்பாளர் என்பதால், என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் முடிந்தவுடன், விஷால் அன்றைய செலவு கணக்குகளைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும்.
அன்றைய கணக்கை அன்றைய தினமே பார்த்தால் தான் எதில் செலவு அதிகமாகிறது என்று தெரியும். செலவு அதிகமானாலோ, கம்மியானாலோ தெரிந்து கொள்ளலாம். கம்மியானால் படத்தை விளம்பரப்படுத்துவதில் உபயோகமாக இருக்கும்.
அடுத்ததாக சூர்யாவை இயக்க இருக்கிறேன். 'பூஜை' வெளியானவுடன் அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட வேண்டும். இப்போது உள்ள இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். கதை விவாதத்திற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காட்சியைப் பற்றி நிறைய பேசுங்கள். அப்போது தான் நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும். காட்சிகளும் புதிதாக கிடைக்கும். நான் கதை விவாதத்திற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டு, படப்பிடிப்பிற்கு கம்மியான நாட்கள் எடுத்துக் கொள்வேன்.
ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குநர்களுக்கும் கமர்ஷியல் இயக்குநர்கள் தான். அவர்கள் பிரம்மாண்டமாக பண்ணுகிறார்கள். நான் எனக்கு தெரிந்த வழியில் பண்ணுகிறேன். அவ்வளவு தான். படத்தின் பட்ஜெட்டை, நாயகிக்கு சேலை வாங்குவதில் இருந்தே பட்ஜெட்டை எவ்வளவு குறைப்பது என்று யோசிப்பேன்.
விஜய், அஜித் போன்ற பெரிய நாயகர்களுடன் பணியாற்ற ஆசை தான். அவர்களுடைய தேதி, என்னுடைய தேதி, கதை, தயாரிப்பாளர் என்று அனைத்தும் அமைந்தால் கண்டிப்பாக பண்ணத் தயாராக தான் இருக்கிறேன். " என்று கூறினார்.