போராட்டம் முடிந்துவிட்டது; வீட்டுக்குத் திரும்புங்கள்: ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

போராட்டம் முடிந்துவிட்டது; வீட்டுக்குத் திரும்புங்கள்:  ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்
Updated on
1 min read

வீட்டுக்குத் திரும்புங்கள், போராட்டம் முடிந்துவிட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்து வருகின்றனர்.

மேலும், மெரினா கடற்கரையை சுற்றி இருக்கும் சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன. இப்போராட்டத்தில் ஈடுபட்டு மாணவர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய ஆர்.ஜே.பாலாஜி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் ஆர்.ஜே.பாலாஜி பேசியிருப்பது:

''என்னைப் பொறுத்தவரைக்கும் நாம் கேட்ட ஒரு விஷயத்தை அரசாங்கம் நிறைவேற்றிவிட்டது. ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்துவதற்கு நிரந்தரமாக வழியை உருவாக்குவோம் என சொல்லியிருக்கிறது. இதுவே நம் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஆனால், இதை உங்களிடம் திணிக்க மாட்டேன் என சொல்லியிருந்தேன்.

அதற்காக இந்தமாதிரி மோசமான விதத்தில் வன்முறையில் ஈடுபட்டு போராட வேண்டும் என்பது மிகவும் தவறாக இருக்கிறது. எதனால் இப்படி செய்கிறீர்கள்?. ஒரு வாரமாக போலீஸ் நம்முடன் இருந்தார்கள். இந்த போராட்டம் வெற்றி என்று நினைத்தோம் என்றால் அதற்கு காரணம் போலீஸ் நம்மை நடத்திய விதம். அரசாங்கமும் நாம் கேட்டதை உடனே டெல்லிக்கு எடுத்துச் சென்று சட்டமாக நிறைவேற்றியுள்ளார்கள்.

முதல் வெற்றியாக இதை எடுத்துக் கொண்டு, இதை கொண்டாட வேண்டிய நேரத்தில் இவ்வளவு தவறாக, வன்முறையில் அடிதடியில் ஈடுபடுவது மிகவும் கேவலமான ஒரு செயல். யாரோ ஒருவர் நம்மை பொறுக்கி என்று சொன்னதற்காக என நாம் கோபப்பட்டோம். ஆனால், இதை மாணவர்கள் செய்கிறார்களா, வேறு யார் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. நிஜத்தில் பொறுக்கி என்ற பெயரை வாங்கி விடுவோமோ என்று பயமாக இருக்கிறது.

யார் அங்கிருந்தாலும் தயவு செய்து வீட்டுக்குச் செல்லுங்கள். போராட்டம் முடிந்துவிட்டது. எப்போது சட்டம் நிறைவேற்றினார்களே, அது தான் நமது முதல் வெற்றி. தயவு செய்து கிளம்பிப் போங்கள். இனிமேலும் சாலையில் இருப்பதில் எவ்வித நியாயமுமில்லை. இவ்வளவு வன்முறையை கையாள்வது கேவலமான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்தப் போராட்டம் மாபெரும் வெற்றி என்பதை தாண்டி கேவலமான ஒரு போராட்டம் என முடிய வேண்டாம்.

மாணவர்கள் மட்டுமே பங்கெடுத்து அறப்போர் செய்தார்கள். உள்ளே யார் புகுந்தார்கள் என தெரியவில்லை. தற்போது நடப்பது அனைத்துமே தப்பு. வீட்டுக்கு திரும்புகள், போராட்டம் முடிந்துவிட்டது!" என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in