

'கோச்சடையான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியான 3 நாட்களில் யூடியூப் தளத்தில் 20 லட்சம் பேர் பார்த்து இருக்கிறார்கள்.
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி கொண்டிருக்கும் படம் 'கோச்சடையான்'. இப்படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் செளந்தர்யா அஸ்வின் இயக்கி வந்தார்.
மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் படம் என்பதால் மிகவும் தாமதமானது. நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், படத்தின் இசை வெளியீடு எப்போது, எப்போது படம் திரைக்கு வரும் என்பதனை தெரிவிக்காமல் இருந்து வந்தது படக்குழு.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை முதன்முறையாக வெளியிட்டு இருக்கிறது படக்குழு. அதுமட்டுமன்றி படத்தின் இசை வெளியீடு அக்டோபர் மாதம் இருக்கும் என்றும் டீஸரில் தெரிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் ரஜினி ஒரு பாடலை பாடியிருக்கிறார். செல்போனில் 'கோச்சடையான்' விளையாட்டு என படத்தினை பல விதமாக விளம்பர செய்யும் முடிவில் இருக்கிறது படக்குழு.
'கோச்சடையான்' படத்தினை வெளியிட சரியான தேதி ரஜினி பிறந்த நாளான 12-12-13 இருக்கும் என்று முடிவில் இருக்கிறது படக்குழு. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.