

தனது ரசிகர்களிடம் அரசியல் குறித்து ஆலோசிக்கவில்லை என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
'தலைவா' படத்தின் பிரச்சினைக்கு பிறகு விஜய் மெளனமாகி விட்டார். இனிமேல் தனது நடிப்பில் படம் வெளியாகும் போது மட்டும் பேட்டியளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு, விஜய் கேரளாவிற்கு சென்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இத்தகவல்களை விஜய் மறுத்திருக்கிறார்.
இது குறித்து விஜய் விடுத்துள்ள அறிக்கையில், “ சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்து ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
நான், கடந்த இரண்டு மாதமாக ஹைதராபாத்தில் 'ஜில்லா' படப்பிடிப்பில் நடித்து வருகிறேன். கேரளாவிற்கே நான் செல்லவில்லை, அப்படியிருக்க இப்படியொரு தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமன்றி நானும் குழப்பமடைந்தேன்.
நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு பகலாக உழைத்து வருகிறேன்.பத்திரிகைகள் உண்மையில்லாத செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.