

அஜித் நடிப்பில் நாளை (31 அக்டோபர்) வெளியாகவிருக்கும் 'ஆரம்பம்' படத்திற்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
திரையரங்குகள் ஒப்பந்தம் செய்து, டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் 'ஆரம்பம்' படத்திற்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த வழக்கு இன்று காலை சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த பிளாக் கிங்டம் பிக்சர்ஸ் சார்பில் கே.கண்ணன் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ‘இனி தான் ஆரம்பம்’ என்ற தலைப்பில் தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். இப்படத்தின் பாடல் பதிவும் நடந்துவிட்டது.
இந்த பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி பதிவு செய்தேன். படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் ஸ்ரீசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் என்பவர் ‘ஆரம்பம்’ என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வெளியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, நான் பதிவு செய்த பெயரை, விதிகளுக்கு முரணாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்த ’ஆரம்பம்’ என்ற பெயரை திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெயர் பதிவு செய்து, தினமும் விளம்பரங்கள் கொடுத்து, படம் வெளியாகும் நேரத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதால், பப்ளிசிட்டிக்காக பண்ணுகிறார்கள் என்று பேச்சு நிலவி வருகிறது.