Published : 29 Nov 2013 00:00 am

Updated : 06 Jun 2017 15:23 pm

 

Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 03:23 PM

ஜெய்யுடன் தொடர்ந்து நடிக்க ஆசை! நவீன சபதம் போடும் நிவேதா!

‘மலையாள பூமி தமிழ்த்திரைக்குப் பரிசாகக் கொடுத்திருக்கும் மற்றுமொரு பைங்கிளி நிவேதா. தமிழில் சில படங்களில் இங்கும், அங்குமாக ஒளி வீசிவந்த இந்த நங்கையை சமுத்திரக்கனி தான் இயக்கிய ‘போராளி’ படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக்கினார். குட்டி ‘பிரேக்’ எடுத்துக்கொண்டிருந்த இவர் நவம்பர் 29 அன்று வெளியாகும் ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீண்டும் கோலிவுட் காற்றில் மிதக்க வந்திருக்கிறார்.

‘போராளி’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிவேதா, அப்படம் திரைக்கு வந்தபோது 11ஆம் வகுப்புக்கு முன்னேறியிருந்தார். படம் திரைக்கு வந்ததும் பல பட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அட்வான்ஸ் கொடுக்க, ‘படிப்பையும், நடிப்பையும்’ இரு கண்களாக எண்ணி, எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் பிளஸ் டூ முடித்த பின்தான் நடிப்பு என்பதில் ஸ்டெடியாக இருந்திருக்கிறார்.


நிவேதாவுக்கு காமெடி கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதுவும் மெசேஜ் கலந்த காமெடி கதை கிடைத்தால் விட்டுக்கொடுக்க முடியுமா?! அப்படி வந்த வாய்ப்புதான் ‘நவீன சரஸ்வதி சபதம்’. கதையை வரி விடாமல் கேட்டுவிட்டு, எந்த நாயகிக்கும் விட்டுக்கொடுக்காமல் அப்போதே கையெழுத் திட்டிருக்கிறார்.

எக்கச்சக்கமான போட்டி நிலவும் தமிழ்த் திரைச் சூழலில், ‘‘யாரையும் போட்டியாக எண்ணிக்கொண்டு நடிக்க சினிமாவிற்கு வரவில்லை. ரசிகர்களுக்குப் பிடித்த கேரக்டரில் வாழ்ந்து காட்டுவேன்’’ என்று அழகுத் தமிழில் சூளுரைக்கும் நிவேதா, மாவட்ட அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி பரிசுகளைப் பெற்றவரும்கூட.

‘‘ஆமாம். நேரம் கிடைக்கும்போது, என்னோட பொழுதுபோக்கே, பேட்மிட்டன் விளையாட்டு தான். இப்போதும் தம்பியுடன் சேர்ந்து விளையாடுவேன். என்ன ஒன்று, எஸ்.ஆர்.எம். காலேஜ்ல பி.இ ஆர்க்கிடெக்ட் முதலாம் ஆண்டு படிக்கறேன். படிப்புக்கான படங்கள் வரைவது, ஹோம் வொர்க் செய்வது என்று விளையாட்டுக்கு நேரமே இல்லை. இப்போ ஆக்டிங் வேற. சொல்லவே வேண்டாம். ‘பேட்மின்டன்’ ஸ்டேடியத்தை நிறையவே மிஸ் பண்றேன்!’’ என்று உருகுகிறார் நிவேதா.

நிவேதாவுக்கு பைக் ஓட்ட ரொம்பவே பிடிக்குமாம். ஆனால், ‘‘எங்க தெருவைத் தாண்டிப் போக அனுமதி இல்லை!’’ என்று வருத்தப்பட்டுக் கொண்டவரிடம், பெற்றோர் தடுக்கிறார்களா என்று கேட்டால், ‘‘இன்னும் லைசன்ஸ் வாங்கல” என்று புன்னகையை வீசுகிறார்.

‘‘நவீன சரஸ்வதி சபதம்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய சீனியர்கள் இருந்தாங்க. நடிப்பு பத்தி நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. குறிப்பா கணேஷ், சத்யன், ஜெய் எல்லோரும் அடிச்ச காமெடிக்கு அளவே இல்லை. டைரக்டர் எங்களையெல்லாம் சமாளிக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவ்ளோ ஜாலியா, அரட்டை அடிப்போம். குறிப்பா, கோ-ஸ்டார் ஜெய் ரொம்பவே பிரண்ட்லி டைப். பயங்கர அரட்டைப் பேர்வழி. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரோட சப்போர்ட் அதிகம். அவர்கூட இன்னும் பல படங்கள் நடிக்கணும்னு ஆசையும் இருக்கு!’’

உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள், நிவேதா!


நவீன சரஸ்வதி சபதம்ஜெய்நிவேதாஇயக்குநர் சந்துரு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author