

செல்லா இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள படத்தில் ரெஜினா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து 'கதாநாயகன்' படத்தில் நாயகனாக நடித்து தயாரித்து வந்தார் விஷ்ணு விஷால். சூரி, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வந்த படத்தை முருகானந்தம் இயக்கி வந்தார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது 'முண்டாசுப்பட்டி' ராம்குமார் இயக்கும் படத்தில் அமலாபாலுடன் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து செல்லா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஷ்ணு விஷால். நாயகனாக நடிப்பது மட்டுமன்றி தயாரிக்கவும் உள்ளார். இதன் நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ள இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், லிவிங்க்ஸ்டன், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மார்ச் முதல் தொடங்கவுள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.