

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கபாலி' படத்துக்கு ட்ரெய்லர் வெளியிடாததின் காரணத்தை படக்குழு தெரிவித்திருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து ஜூலை 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு படத்தை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'கபாலி'யை விளம்பரப்படுத்தும் பணிகள் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது பொருட்களை 'கபாலி' மூலமாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
இதுவரை 'கபாலி' படத்துக்கு டீஸர் மற்றும் 'நெருப்புடா' பாடலின் டீஸர் ஆகியவை மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "டீஸர் மற்றும் பாடல் டீஸர் இரண்டுக்குமே பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆசியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீஸர் என்ற பெருமை 'கபாலி'க்கு கிடைத்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்கள், டீஸர் என வெளியிடப்பட்டு இருக்கிறது. அனைத்தையும் மீறி படமும் வெளியீட்டுக்கு நெருங்கிவிட்டது. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. இதனால் ட்ரெய்லர் வேண்டாம் என கருதினோம். வேறு எந்த ஒரு காரணமும் இல்லை" என்று தெரிவித்தார்கள்.