

அமைதியான முறையில் நடக்கும் மாணவர்களின் போராட்டத்தில் காவல்துறையின் தீவிரத் தாக்குதல், நல்ல தீர்வைத் தராது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், சில இடங்களில் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து போராட்டப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:
''இது தவறு. அமைதியான முறையில் நடக்கும் மாணவர்களின் போராட்டத்தில் காவல்துறையின் தீவிர தாக்குதல், நல்ல தீர்வைத் தராது.
அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை, தமிழக அறப்போராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை.
வன்முறை பயன் தராது. இதுவரை காத்த அறத்தைக் கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது'' என்று கமல் கூறியுள்ளார்.