அனிருத்தின் இசை ஆர்வம் - இயக்குநர் ஷங்கர் மகிழ்ச்சி

அனிருத்தின் இசை ஆர்வம் - இயக்குநர் ஷங்கர் மகிழ்ச்சி
Updated on
2 min read

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் திருக்குமரன் இயக்கும் ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார்.

‘மான் கராத்தே’ படத்தின் இசையை வெளியிட்ட பிறகு இயக்குநர் ஷங்கர் பேசியதாவது: “மான் கராத்தே’ என்ற தலைப்பிற்கு என்ன அர்த்தம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட் டேன். ‘சண்டைன்னு வரும் போது மான் மாதிரி துள்ளிக் குதித்து ஓடுறது தான் மான் கராத்தே என்று அவர் கூறினார். தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத்தின் ரசிகனாக நான் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தேன். ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’, ‘வேலையில்லா பட்டதாரி’ என அனிருத் இசையமைத்த அனைத்து படங்களின் பாடல்களையும் நான் கேட்டு வருகிறேன். ‘வணக்கம் சென்னை’ படத்தில் அவருடைய பாடல்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். எனது காரில் ஏறியவுடன் ‘வணக்கம் சென்னை’ படத்தின் பாடல்கள் தான் ஓடும்.

ஒருவர் வளர வேண்டுமானால் புதிதாக வரும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். நான் ஏ.ஆர்.ரஹ்மானோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் வெளியே சென்று விடுவார். எங்கே செல்கிறார் என்று விசாரித்தபோது ‘ஹிந்துஸ்தானி’ இசையை கற்றுக் கொள்ள சென்றிருக்கிறார் என்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதே போல, தற்போது அனிருத் கர்னாடக இசையை கற்றுக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரது இசை ஆர்வத்தைப் பற்றி கேள்விப்படும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னைப் போன்ற இயக்குநர்கள் எல்லாம் ஒரு படம் பார்த்தோம் என்றால் நிறைய விஷயங்களில் திருப்தியே அடைய மாட்டோம். ஆனால், எனக்கு ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி' படம் மிகவும் பிடித்தது. சிவகார்த்திகேயன் வளர்ச்சியையும் நான் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.விரைவில் முன்னணி நாயகர்கள் வரிசைக்கு அவர் வந்து விடுவார்.” இவ்வாறு ஷங்கர் பேசினார்.

இவ்விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “இந்த மேடையில் இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரோடு உட்கார்ந்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன். எப்படியாவது ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் படங்களில் நடித்துவிட வேண்டும் என்பது என் ஆசை. அவர்களுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்றால், அதற்கான வியாபாரம் இருக்க வேண்டும். அந்த முயற்சியில்தான் இருக்கிறேன்.

‘மான் கராத்தே’ படத்துக்காக என்னை அணுகியபோது, இப்படத்தின் கதை ஏ.ஆர்.முருகதாஸ் சாருடையது என்றார்கள். உடனே பண்ணலாம் என்று கூறினேன். எல்லாருமே இதற்கு முன்பு நான் நடித்த படங்களைப் பார்த்து காமெடி மட்டும்தான் இருக்கு. கதையே இல்லையப்பா என்று கூறினார்கள். அது இந்தப் படத்தில் மாறும் என்று நம்புகிறேன். நான் ஸ்டார் அந்தஸ்தை நினைத்து படங்களை பண்ணுவதில்லை. என் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் ரசித்து படம் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in