Published : 10 Dec 2013 07:48 PM
Last Updated : 10 Dec 2013 07:48 PM

சென்னை பட விழாவுக்கு சொந்த செலவில் வருகிறார் அமீர் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர் கான், 11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க விழாவில் பங்கேற்கிறார். சென்னையில் வியாழக்கிழமை நடக்கும் இந்த விழாவிற்கு அவர் தனது சொந்த செலவில் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் நடந்த விழாவிற்கு அமிதாப் பச்சன் அவர் செலவில் வந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையே அமீர் கானும் பின்பற்றுகிறார்.

எட்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவை இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்துகிறது. விழா அமைப்பாளர் சுஹாசினி மணிரத்னம் கூறும்போது, "எங்களது துவக்க விழாவிற்கு வந்து சிறப்பிப்பதாக அமீர் கான் கூறியுள்ளார். தனது சொந்த செலவிலேயே வருவேன் என்றும், எங்கு, எப்போது எந்த ஹோட்டலுக்கு வர வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதும் என்றும் அவர் சொன்னார்" என்றார்.

"கடந்த மூன்று வருடங்களாக இந்த விழாவிற்கு அமீரை அழைக்க முற்பட்டுள்ளேன். இப்போது நடந்துள்ளது. எங்களுக்கு எந்த செலவையும் வைக்காமல் அவர் வர முடிவு செய்தது எங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்ற வருடம், இதே போல எங்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தானகவே விழாவிற்கு வந்த நடிகர் அமிதாப் பச்சன், 11 லட்ச ரூபாய் நன்கொடையும் அளித்தார்" என்றார் அவர்.

இந்த வருடம் கான்ஸ், பெர்லின், வெனிஸ் ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திரைப்படங்கள், சென்னை விழாவில் திரையிடப்படவுள்ளன.

விமர்சகர்களின் பாராட்டை பெற்ற இத்தாலியின் 'கிரேட் பியூடி', ஃபிரெஞ்ச் ரொமான்டிக் திரைப்படமான 'யங் அண்ட் பியூட்டிஃபுல்' உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த முறை பட்டியலில் உள்ளன. துவக்க நாளன்று நடிகைகள் ஷோபனா மற்றும் ஸ்வர்ணமால்யா, பாடகர் கார்த்திக், இசைக் கலைஞர் அனில் ஸ்ரீனிவாசன் ஆகியோரது சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து 4 வது முறையாக, இந்த வருடமும், சிறந்த தமிழ் படங்களை கவுரவிக்கும் போட்டி பிரிவு உள்ளது. இதில் சூது கவ்வும், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், பரதேசி உள்ளிட்ட 12 படங்கள், 6 லட்ச ரூபாய் பரிசிற்கு போட்டியிடவுள்ளன.

நிறைவு விழாவிற்கு மலையாள நடிகர் மோகன்லால் சிறப்பு விருந்தினராக வருகிறார். அன்று இசையமைப்பாளர் அனிருத்தின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அமிதாப் பச்சன் பெயரில் நிறுவப்பட்டுள்ள அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருதினை அவர் அன்று பெறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x