ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் உருவானது எப்படி?

ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் உருவானது எப்படி?
Updated on
1 min read

ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது, தனுஷ் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ரஜினி தான் முடிவு செய்தது நமக்குத் தெரியவந்துள்ளது.

'2.0' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினி. இப்படத்தை தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தவுடன் பலரும் ஆச்சர்யப்பட்டனர். 'கபாலி 2' ஆகத் தான் இப்படம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

எப்படி இக்கூட்டணி உருவானது என்று விசாரித்த போது, "அமெரிக்காவில் ஒய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பியவுடன், முதலில் இயக்குநர் ரஞ்சித்தைத் தான் பார்க்க விரும்பினார் ரஜினி. படத்தின் வசூல், தனது நடிப்புக் குறித்த விமர்சனங்கள் ஆகையவை அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது.

'கபாலி' வெற்றிக் குறித்து நீண்ட நேரம் ரஞ்சித்திடம் பேசியிருக்கிறார் ரஜினி. எப்போதுமே தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களுக்கு மட்டும் தான் 2-வது முறையாக இயக்கும் வாய்ப்பைக் கொடுப்பார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, "ரஞ்சித் சார்.. நம்ம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா. கதை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்க, ரஞ்சித்துக்கு மிகவும் ஆச்சர்யம்.

உடனே தன்னிடம் இருந்த கதைக்கான ஒன்லைன் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். "நல்லாயிருக்கு.. முழுமையாக தயார் பண்ணுங்கள். தனுஷ் தான் தயாரிப்பாளர்" என்று கூறியிருக்கிறார். ரஜினியை சந்திக்க வரும் போது, இயக்குநர் ரஞ்சித்துக்கே தான் அடுத்த ரஜினி படத்தை இயக்கவிருக்கிறோம் என்பது அவருக்கே தெரியாது. அது தான் ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்" என்று நம்மிடம் நெருங்கிய வட்டாரம் தெரிவித்தன.

மேலும், இப்படத்தின் திரைக்கதை அமைப்பை எழுதி முடிக்க சில மாதங்கள் எடுத்துக் கொள்ளவிருக்கிறார் ரஞ்சித். முழுமையாக எழுதி முடித்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் படப்பிடிப்பு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக இக்கதை 'கபாலி 2' கிடையாது என்று திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. கபாலிக்கு சற்றும் தொடர்பில்லாத வேறு கதை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in