

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் 'மெர்குரி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்' தற்போது தமிழ் திரையுலகிலும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. முதலாவதாக 2 படங்களையும், 1 வெப் சீரீஸையும் தயாரித்து வருகிறார்கள்.
இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படத்தையும், ஸ்டோர் பெஞ்ச் நிறுவனமே தயாரித்து வருகிறது. முழுப்படப்பிடிப்பும் முடிந்துவிட்ட இதற்கு 'மெர்குரி' என தலைப்பிட்டுள்ளார்கள். தலைப்புக்கு கிழே 'SILENCE IS THE MOST POWERFUL SCREAM' என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.
இப்படத்தில் வசனங்களே கிடையாது. முழுக்க பின்னணி இசை மூலமாக முழுப்படமும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இதில் வில்லனாக நடித்துள்ளார் பிரபுதேவா.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. பிரபுதேவா உடன் சனத், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளை கவனித்து வருகிறார்.
குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என தீர்மானித்து, சென்னை மற்றும் புதுச்சேரியில் முழுபடப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு.