

'சென்னை 28' படத்தின் 2- ஆம் பாகம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷின் கதை ஒன்றை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
வெங்கட்பிரபு இயக்கிய முதல் படம் 'சென்னை 28'. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியாகி பெரிய ஹிட்டானது. தொடர்ந்து 'சரோஜா', அஜித் நடிப்பில் 'மங்காத்தா' உள்ளிட்ட ஹிட் படங்களை தந்த வெங்கட் பிரபு, 'பிரியாணி', 'மாஸ்' ஆகிய படங்கள் மூலம் சிறிய பின்னடைவை சந்தித்தார்.
தற்போது 'சென்னை 28' படத்தின் 2-ஆம் பாகத்தை இயக்கி முடித்திருக்கும் வெங்கட் பிரபு தொடர்ந்து 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ராஜேஷ் எழுதியிருக்கும் கதையை இயக்குகிறார். இத்திரைப்படத்தை அம்மா க்ரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. 'சென்னை 28' பார்ட் 2, நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெங்கட்பிரபு தயாரிப்பில், நடிகர் 'மிர்ச்சி' சிவா இயக்கும் ஒரு படமும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இது சமூக விழிப்புணர்வு படமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.