Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

த்ரிஷாவைக் காணவில்லை!

ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகுதான் அழகிப் போட்டிகள் இந்தியாவில் பிரபலம் ஆகத் தொடங்கின என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை, த்ரிஷாவுக்குப் பிறகுதான் தமிழ் அழகிகள் கவனிக்கப்பட்டார்கள் என்பதும். மிஸ் சென்னை என்ற போட்டியில் முதல் வெற்றியாளர் த்ரிஷா! 1999 முதல்தான் மிஸ் சென்னை என்ற அழகிப் போட்டியையே நடத்தத் தொடங்கினார்கள். சொல்லப் போனால், சென்னையில் முதன்முதலில் நடந்த மிகப் பிரம்மாண்டமான அழகிப் போட்டி அதுதான்!

அதற்கான இறுதிச் சுற்று..! சென்னை மியூசிக் அகடமி அரங்கமே ’த்ரிஷா... த்ரிஷா’ என்று அலறிக் கொண்டிருந்தது. இறுதிசெய்யப்பட்ட 10 பேர் பட்டியலில் த்ரிஷா இருந்தார். பூனை நடையெல்லாம் போட்டுப் பார்வையாளர்களை அழகிகள் பரவசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கென்னவோ வத்தக்காச்சியாக, பொட்டு சதையில்லாமல் இருந்த த்ரிஷாவைவிடக் கொஞ்சம் பூசினாற்போல இருந்த நிருபமா என்ற பெண்ணைத்தான் பிடித்திருந்தது. அந்தப் பெண்ணும் பத்திரிகைகளில் மாடலாக போஸ் கொடுத்துக் கொஞ்சம் அறிமுகமாகி இருந்தார். அந்த நிருபமா டாப் த்ரீ பட்டியலில்கூட இடம்பெறாமல் போக, கடைசியில் த்ரிஷா ஜெயித்தேவிட்டார்.

எகிறிக் குதித்து மேடையேறி என் விசிட்டிங் கார்டைக் கொடுத்துப் பேட்டி வேண்டும் என்றேன். நாளைக்குப் பனிரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்திருங்க... என்றவர் முகவரியும் சொன்னார்.

அடுத்த நாள் பனிரெண்டு மணிக்கு அவர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியபோது கதவைத் திறந்த வேலைக்காரப் பெண், ‘நீங்க முருகேஷ் பாபுவா?’ என்றார். ஆமென்றதும் உள்ளே அழைத்துச் சென்றார். இரவு உடையில் உடலெங்கும் ஆலிவ் எண்ணெய் தேய்த்துக்கொண்டு மினுமினுப்பாக வரவேற்பறை சோபாவில் காத்திருந்தார் த்ரிஷா. அவர் எதிரே இருந்த டீப்பாய் மீது நான் முந்தைய நாள் கொடுத்த விசிட்டிங் கார்ட் இருந்தது.

த்ரிஷாவை அந்தக் கணம் முதல் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. கோவையாக, தீர்மானமாகப் பேசினார். பதில்கள் தெளிவாக வந்து விழுந்தன. அழகி, அட்டைப் படமாக வருவதில் ஆச்சரியமென்ன..?! அந்த இதழ் அட்டையில் த்ரிஷாதான்!

அடுத்து மில்லியனியம் ஆண்டு சிறப்பு அட்டைப் படத்துக்காக மறுபடியும் த்ரிஷாவை அழைத்தேன். என்ன கட்டுரை, அதில் தன் பங்களிப்பு என்ன என்று கேட்கவில்லை. நீங்கள் எனக்கு நல்லதே செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு வந்தார்.

த்ரிஷா சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த பிறகு பிஸியாகிவிட்டார். பெரும்பாலான போன் கால்களுக்குத் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார் என்ற பேச்சு சினிமாவில் பரவலாக எழுந்திருந்த நேரம்...

வாசகர்களின் ஆசையை நிறைவேற்றி அதைக் கட்டுரையாக்கும் அசைன்மெண்டில் இருந்தேன் நான். ஒரு வாசகரின் ஆசை, தன் பைக்கில் த்ரிஷா பயணிக்க வேண்டும் என்பது! த்ரிஷாவை அழைத்தேன். அவருடைய அம்மா பேசினார். விஷயத்தைச் சொன்னேன். டான்ஸ் ரிகர்சல் போயிருக்கா... அரைமணியில் கூப்பிடுறேன்.. என்றார். அரைமணியில் த்ரிஷா அழைத்தார்.

‘சார்... நான் எப்போ எங்கே வரணும்..?’ என்றார். போட் கிளப் என்று இடம் முடிவானது. அந்த வாசக இளைஞரும் வண்டியை வாட்டர் சர்வீஸெல்லாம் விட்டுப் பளபளப்பாக்கிக்கொண்டு வந்திருந்தார். சரியான நேரத்துக்கு வந்தது த்ரிஷாவின் கார். படபடப்போடு நின்றுகொண்டிருந்த வாசகரிடம் கொஞ்சம் பேசிக் கேஷுவலாக்கிவிட்டு போட்டோகிராபரிடம், ‘நாங்க ரெடி… நீங்க ரெடியா..?’ என்றார்.

நானும் த்ரிஷாவின் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கப் பல கோணங்களில் த்ரிஷாவும் வாசகரும் பைக் அருகில் நின்று போஸ் கொடுத்தனர். ‘ம்… ஸ்டார்ட் இம்மீடியட்லி…’ என்ற த்ரிஷா சட்டென்று இருபுறமும் கால் போட்டு வாசகர் தோளில் கை வைத்து உட்கார, பைக் எடுத்த எடுப்பிலேயே டா கியரில் எகிறியது.

தெருவின் முனையில் போய்த் திரும்புவதாகத் திட்டம். நானும் த்ரிஷாவின் அம்மாவும் பைக் செல்லும் திசையைப் பார்த்தபடி நிற்கத் தெருமுனை வரை சென்ற பைக் அப்படியே வலதுபக்கம் திரும்பி வேகமெடுத்துவிட்டது. த்ரிஷாவின் அம்மா கேஷுவலாக விசாரிப்பது போல, ‘அந்த ரீடர் எந்த ஊர்… என்ன பண்றார்..?’ என்றெல்லாம் கேட்டார். போலீஸில் சொல்ல விவரம் சேகரிக்கிறார் என்றே தோன்றியது.

போட்டோகிராபர் வியூ ஃபைண்டர் வழியாகத் தெருமுனையைப் பார்த்துக்கொண்டிருந்தார். இருவரும் பைக்கில் திரும்பும்போது அழகான ஷாட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு. நொடிகள் நிமிடங்களாகின. த்ரிஷாவைக் காணவில்லை. எனக்கு லேசாகப் பதற்றம் ஏற்பட்டது. த்ரிஷா அம்மாவை விட்டுக் கொஞ்சம் தள்ளி போட்டோகிராபர் அருகே போய் நின்றுகொண்டு த்ரிஷாவின் மொபைலுக்கு டயல் செய்தேன். த்ரிஷா அம்மாவின் கையில் இருந்த போன் ஒலித்தது.

‘அந்தப் பையன் நம்பர் இருந்தா போட்டுப் பாருங்களேன்…’ என்றார்.

எங்கள் முதுகுக்குப் பின்னால் ஹாரன் ஒலி கேட்டது. சிரித்த முகத்தோடு வந்து இறங்கினார் த்ரிஷா. என்ன… போலீஸுக்குப் போன் பண்ணிட்டீங்களா, இல்லையா..? என்றவர், ‘சார்… மூணு பக்கம் கட்டுரை எழுதக் கன்டென்ட் வேணாமா… இதையும் ரெண்டு பாரா சேர்த்துக்கோங்க… பார்க் ஷெரட்டன் சிக்னல்ல நாலுபேர் தெறிச்சுட்டாங்க… அதுல யாராச்சும் மீடியா ஆள் இருந்தா ஈவ்னிங் பேப்பர்ல நியூஸ் வந்துடும்…’ என்று சிரித்தார். பத்திரிகையாளர்களுக்கு நட்போடு ஒத்துழைப்புக் கொடுக்கும் த்ரிஷாவை அப்போது அதிகம் பிடித்துப் போனது.

தொடர்புக்கு:cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x