

நமது நாட்டிலுள்ள அரசியல்வாதிகளில் பலரும் சொத்து குவித்துள்ளனர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த்.
அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமாகிவிட்டது. அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் எனத் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவில் அதிர்வலைகளை சற்றும் குறையவில்லை.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்னமும் கூவத்தூர் சொகுசு விடுதியில்தான் இருக்கிறார்கள். ஆளுநர் இன்னும் தனது மவுனத்தை கலைக்கவில்லை. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அவ்வப்போது தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த், "நூறு, ஆயிரம் கோடிகளில் வருமானத்துக்கு அதிகமாக பல அரசியல்வாதிகள் நமது நாட்டில் சொத்து குவித்துள்ளனர். அதில் சிலர் மட்டுமே ஊழல் செய்ததற்கான விலையை கொடுக்கின்றனர்.
நம்மால் ஊழலை எதிர்த்து சண்டையிட முடியும். நேர்மையாக. நமது வரிகளை செலுத்த முடியும். ஊழலற்ற நிர்வாகத்தை நிர்பந்தித்து கேளுங்கள். நீங்களே மாற்றமாக இருங்கள். உறுதி எடுங்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.