

'தி இந்து' குழுமத்தில் திரைப்பட இதழியலாளர்கள் பரத்வாஜ் ரங்கன், கா.இசக்கிமுத்து ஆகியோர் 'இண்டிவுட்' விருது பெற்றனர்.
இண்டிவுட் ஃபிலிம் கார்னிவலின் மூன்றாவது எடிஷனில், சினிமா சார்ந்த இதழியல் எழுத்தில் நீண்ட காலமாக இயங்கி வருபவரும், தேசிய விருது பெற்ற திரைப்பட விமர்சகருமான பரத்வாஜ் ரங்கனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விழுது வழங்கப்பட்டது. இதே பிரிவில் திரைப்பட ஆர்வலர் ஸ்ரீதர் பிள்ளைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'தி இந்து' (தமிழ்) திரைப்பட செய்தியாளர் கா.இசக்கிமுத்துக்கு, துறை சார்ந்து சிறந்து விளங்குவதை கவுரவிக்கும் வகையில் 'இண்டிவுட் மீடியா எக்சலன்ஸ் விருது' வழங்கபட்டது.
கமல்ஹாசன், செல்வராகவன், மிஷ்கின், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோரின் நேர்காணல்களுடன் 300-க்கும் மேற்பட்ட சிறப்புச் செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ள இசக்கிமுத்து, 'தி இந்து' இணையதளத்தில் சினிமா பிரிவை நிர்வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர்வேலன் (குங்குமம்), ஜனனி (டெக்கான் க்ரானிக்கல்), பி ஜான்சன் (ஆனந்த விகடன்), லதா ஸ்ரீநிவாசன் (லைஃப்ஸ்டைல்), சந்திரசேகர் (தினமலர்), பரத் குமார் (நியூஸ் டுடே), தேவ்ராஜ் யோகி (தினகரன்), எம்.சுகந்த் (டைம்ஸ் ஆஃப் இந்தியா), சுதிர் ஸ்ரீநிவாசன் (தி நியூ இந்தியன்), ஆர்.ராஜா (சூர்யா டிவி) மற்றும் கிருபாகர் (இந்தியா டுடே) ஆகியோர் 'இண்டிவுட் மீடியா எக்சலன்ஸ் விருது' பெற்றவர்களில் அடங்குவர்.
தமிழ் சினிமாவில் மக்கள் தொடர்பு துறையில் சிறப்பாக பங்காற்றி வருவதாக நிகில் முருகன், டைமண்ட் பாபு ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
இண்டிவுட் ஃபிலிம் கார்னிவல் நிறுவன இயக்குனர் ஸ்ரீ சோஹன் ராய். 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாதனையாளர்களை கவுரவித்தனர்.
பல்வேறு மொழியில் வெளிவரும் இந்திய சினிமாவை ஒன்றிணைத்து உலக அரங்குக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் சர்வதேச பட விழாக்கள், திரைப் பயிற்சி பட்டறைகள், சிறப்பு விருதுகள் உள்ளிட்ட முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இண்டிவுட் ஃபிலிம் கார்னிவல் நிறுவன இயக்குனர் ஸ்ரீ சோஹன் ராய் தெரிவித்தார்.