

ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்த 'சிங்கம் 2' படம் 100 நாட்களை கடந்துள்ளது.
ஹரி இயக்கத்தில், சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்த படம் 'சிங்கம் 2'. 'சிங்கம்' முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து 'சிங்கம் 2' படக்கதை துவங்குவது போன்று திரைக்கதை அமைந்திருந்தார் ஹரி.
2010ல் வெளிவந்த 'சிங்கம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அப்போதே 'சிங்கம் 2' படம் பண்ணலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் சூர்யாவின் கால்ஷீட் 'சிங்கம் 2'விற்கு 2012ல் தான் கிடைத்தது.
தெலுங்கிலும் சூர்யாவின் படங்களுக்கு மார்க்கெட் இருப்பதால், 'சிங்கம்' படம் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காகி வெற்றி பெற்றது. இந்தியில் சுமார் 100 கோடி கலெக்ஷனை அள்ளியது.
'சிங்கம்' படத்தினைத் தொடர்ந்து சூர்யா - ஹரி இருவரும் தனித்தனியாக பணியாற்றி படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை பெறவில்லை. தனுஷ் உடன் ஹரி பணியாற்றிய 'வேங்கை', ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் ஆகியோருடன் சூர்யா பணியாற்றிய படங்கள் என அனைத்துமே மக்களிடம் சுமாரான வரவேற்பையே பெற்றன.
இருவருமே வெற்றிக்கு கைக்கோத்த படம் தான் 'சிங்கம் 2'. எதிர்பார்த்த வெற்றியை இருவருக்குமே பெற்றுத்தந்தது. பரபரப்பான திரைக்கதை, கலர்ஃபுல்லான பாடல்கள் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றன.
'சிங்கம் 3' படத்தினை சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். சிங்கம் மீண்டும் உறுமுமா?