வலியைப் பொருட்படுத்தாது படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன்

வலியைப் பொருட்படுத்தாது படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன்

Published on

குடல்வால் அறுவை சிகிச்சை முடிந்து, மும்பையில் 'கப்பர்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்.

அல்லு அர்ஜுனுடன் நடித்து வரும் 'ரேஸ் குர்ரம்' படப்பிடிப்பிலும், ராம் சரணுடன் நடித்த 'யாவடு' படத்தினை விளம்பரப்படுத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் ஸ்ருதிஹாசன்.

திடீரென வயிறு வலி காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஸ்ருதிஹாசனுக்கு என்ன பிரச்சினை என்பதை யாருக்குமே தெரியாமல் ரகசியம் காத்தார்கள்.

ஸ்ருதிஹாசன் குடல்வால் சிகிச்சை முடிந்து நலமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பால், ஸ்ருதிஹாசன் ஒய்வு எடுப்பார் என்றும், படப்பிடிப்பில் சில நாட்களுக்கு கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று காலை மும்பையில் தொடங்கிய 'கப்பர்' படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். குடல்வால் சிகிச்சை என்றால் கடும்வலி இருக்கும். அந்த வலியை பொருட்படுத்தாது படப்பிடிப்பில் கலந்து கொண்டதால், படக்குழுவினர் ஸ்ருதிஹாசனின் ஈடுபாட்டைப் பார்த்து வியந்திருக்கிறார்கள்.

அக்‌ஷய் குமார், ஸ்ருதிஹாசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கப்பர்' படத்தினை க்ரிஷ் இயக்கி வருகிறார். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் வரவேற்பை பெற்ற 'ரமணா' படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in