

‘‘விரைவில் வெளியாகவுள்ள ‘புரூஸ் லீ’ படத்துக்காக ஆவலோடு காத்திருக்கேன். அது இளைஞர்களுக்கான படமாக இருக்கும். ஒரு நடிகனாக இது எனக்கு முக்கியமான ஆண்டு’’ என்று உற்சாகத்தோடு பேசத் தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ்.
சமீபகாலமாக போராட்டக் களங்களில் தொடர்ந்து உங்களைக் காண முடிகிறதே..
எந்த ஒரு போராட்டத்தையும் நான் முன்னெடுக்கவில்லை. முக்கியமான போராட்டங்களில் நம் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று கருதுகிறேன். மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தேன். மற்றபடி, போராட்டக் களத்தில் பேசி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விளம்பர ஆதாயம் தேடுவது என் நோக்கமல்ல.
கேரளா, கர்நாடகாவில் அனுமதி இல்லாத ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. தொடர்ந்து பல விஷயங்களிலும் புறக்கணிக்கப்படும்போது, நாம் அனைவரும் எழுந்து நிற்கிறோம். நெடுவாசல் போராட்டத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் ‘தியாகம் செய்வோம் வா’ என்ற பாடல் இசையமைத்துள்ளேன்.
காமெடி கதையை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறீர்களே...
அனைவராலும் காமெடி செய்ய முடியாது. அது மிகவும் கடினம். ஒரு நடிகருக்கு முதல் 3 நாள் வசூல் மிகவும் முக்கியம். காமெடி படங்கள் நன்கு போகிறது என்பதால், தொடர்ச்சியாக காமெடி படங்கள் செய்தேன். அதுமூலமாக கொஞ்சம் வியாபாரம் கூடியிருப்பதால், அடுத்த கட்டமாக வெவ்வேறு களங்களில் படங்களை ஒப்புக்கொண்டுள்ளேன். கமர்ஷியல், வித்தியாசமான கதை என அனைத்து கதைக் களங்களிலும் படம் பண்ணத்தான் ஆசை. ‘புரூஸ் லீ’க்கு பிறகு, இப்போதைக்கு காமெடி கதை கிடையாது. வேறு சில படங்கள் செய்துவிட்டுதான் காமெடி பக்கம் வருவேன்.
நடிகராகிவிட்டதால், இசையமைப்பதில் கவனம் செலுத்த முடிவதில்லையோ?
நடிப்புக்கு அதிகம் உழைக்கவேண்டி இருப்பதால், முன்பு இருந்த அளவுக்கு முழு நேரமும் இசைக்கு ஒதுக்க முடியாதது உண்மைதான். அதற்காக, இசையை நான் விட்டுவிடவில்லை. இசையமைப்பாளராகத்தான் அறிமுகமானேன். அந்த இசை எனக்குள்தான் இருக்கிறது.
நடிப்பில் உங்கள் பலம், பலவீனம்?
ஒரு காட்சியில் ரொம்ப எனர்ஜியோடு நடிப்பது பலம். கண்டிப்பாக இன்னும் நன்றாக நடிக்க வேண்டும். உடல்மொழியில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
பாலா, வெற்றிமாறன், ராஜீவ் மேனன் ஆகியோரது படங்களில் நடிக்க இருப்பது குறித்து...
மூவருமே வெவ்வேறு பள்ளிகள். கண்டிப்பாக அவர்களது படங்கள் என்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரது இசையிலும் ஒரு படமாவது செய்ய வேண்டும் என்று எல்லா நடிகர்களுக்குமே ஆசை இருக்கும். ஒரு இசையமைப்பாளராகவும் அவர்களை நான் வியந்து பார்க்கிறேன். அப்படியிருக்கும்போது, என் படங்களுக்கு இசையமைக்கிறார்கள் என்றபோது சந்தோஷம் பலமடங்கு கூடியிருக்கிறது.
ராஜீவ் மேனன் படத்துக்காக மிருதங்கம் கற்று வருகிறேன். முதலில் ‘நாச்சியார்’ படத்துக்கான போட்டோ ஷுட்டின்போது ரொம்பவே பயந்தேன். ‘இவ்வளவு பாரு’, ‘இவ்வளவு திரும்பு’, ‘இவ்வளவுதான் குனியணும்’ என்று சின்னச் சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்து போட்டோ ஷுட் எடுத்தார்கள்.
வெற்றிமாறனுடன் இணையவுள்ள படம் அற்புதமான கதை. அவர் இதுவரை எழுதியதிலேயே, மிகச்சிறந்த கதை என்று சொல்லலாம்.
‘டார்லிங்’ வெளியானபோது, பெரிய இயக்குநர்களின் படங்களில் எல்லாம் நடிப்பீர்கள் என ஊகித்தீர்களா?
‘டார்லிங்’ முடிந்து வெளியாவதற்கு முன்பு, ‘வெற்றியடைந்தால் நடிக்கலாம், இல்லாவிட்டால் இசையமைப்பை மட்டும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைத்தேன். அது வெற்றி பெற்றதால் தொடர்ந்து படங்கள் வந்தன. நடிக்கத் தொடங்கினேன். திரையுலகில் 11-வது ஆண்டாக இருக்கிறேன். சினிமாவில் எந்த வேலை செய்தாலும் காதலுடன் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. அதற்காக கடினமாக உழைக்கிறேன். பலனும் கிடைக்கிறது!