

விஷால், லட்சுமி மேனன், சரண்யா பொன்வண்ணன், ஜெகன், சுந்தர்ராம் மற்றும் பலர் நடிக்கும் 'நான் சிகப்பு மனிதன்'. படத்தினை திரு இயக்கியிருக்கிறார். விஷால் தயாரித்துள்ள இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை வெளியிடப்பட்டது. படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட, இயக்குநர் ஹரி மற்றும் 'நான் சிகப்பு மனிதன்' படக்குழு பெற்றுக் கொண்டது.
முன்பாக மார்ச் 12ம் தேதி ரஜினியை 'நான் சிகப்பு மனிதன்' படக்குழு சந்தித்தது. படத்தின் தலைப்பு ரஜினி நடித்த படத்தின் தலைப்பு என்பதால் அவரை சந்தித்து இருக்கிறது. டீஸர் மற்றும் பாடல்களைப் பார்த்த ரஜினி, கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று கூறி தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேசியது, "'பாண்டியநாடு' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறேன்.
என்னிடம் சொந்தமாக கார், வீடு என்று இருப்பதை எல்லாம் விட இப்படக்குழு என்னுடன் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த படம் இவ்வளவு சீக்கிரமாக, சிறப்பாக வந்திருப்பதிற்கு காரணம் படக்குழு தான்.
இவ்விழாவில் பேசிய விஷ்ணு 'லட்சுமிமேனனை பார்க்க விஷால் விடுவதில்லை என்பதற்கான காரணம் என்ன?' என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறினார். விஷ்ணுவை நான் பார்க்க விட்டிருந்தால், விஷ்ணுவின் அப்பாவே, விஷ்ணுவை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். நாமெல்லாம் படத்தில் தான் மகன் கையில் அப்பாவே விலங்கு மாட்டுவதை பார்த்திருப்போம். அது நிஜத்தில் நடந்துவிட கூடாது என்பதற்காக தான் வேண்டாம் என்று கூறினேன்.
மேலும், நான் இந்த சமயத்தில் கதாநாயகிகள் அனைவருக்கும் சல்யூட் அடிக்கிறேன். ஏனென்றால் 'அவன் இவன்' சமயத்தில் 17 நாட்கள் பெண்ணாக நடிக்க வேண்டியது இருந்தது. அந்த சமயத்தில், நான் பெண்ணாகவே மாறிவிட்டேன். அதற்கு இயக்குநர் பாலா தான் காரணம்.
சேலை எல்லாம் கட்டிவிட்டு வந்து நிற்கும் போது, ஒளிப்பதிவாளர் வில்சன் சேலையை கொஞ்சம் சரி பண்ணுங்கள்.. கொஞ்சம் கிளாமராக இருக்க வேண்டும் என்பார். எனக்கு ஒரு மாதிரியாக இருக்கும். அதுமட்டுமன்றி அந்த சமயத்தில் யாராவது இடுப்பில் கை வைத்தால், உடனே கையை எடுங்கள் என்று கூறிவிடுவேன்.
இந்த சமயத்தில் இந்த படத்தில் நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், லட்சுமிமேனன், இனியா உள்ளிட்ட எல்லா நடிகைகளுக்கு நான் சல்யூட் அடிக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்.
லட்சுமிமேனனுக்கு 17 வயது தான் ஆகிறது. இந்த வயதில் மிகவும் மெச்சூரிட்டியோடு இருக்கிறார். இந்தபடத்தில் தண்ணீருக்கு அடியிலும், மேலும் ஒரு காட்சியும் இருக்கிறது. நான் நடிப்பதற்கு மிகவும் தயங்கினேன். இயக்குநர் திரு, லட்சுமி மேனனிடம் போய் சொல்லும் போது அதான் நீங்கள் என்னிடம் கதை கூறும் போதே சொல்லிவிட்டீர்களே.. நடிக்கிறேன் என்று கூறினார்.
இந்த படத்தின் டீஸருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. கண்டிப்பாக அந்த டீஸரைப் போலவே படமும் மக்களிடையே வரவேற்பை பெறும்" என்று கூறினார்.
இயக்குநர்கள் சமுத்திரகனி, விஷ்ணுவர்தன், அகத்தியன், நாசர், சரண்யா பொன்வண்ணன், இனியா, விஷ்ணு விஷால், அருண் விஜய், ஜித்தன் ரமேஷ், விக்ராந்த் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.