

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
'காலா' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் மே 28ம் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அறிவித்தது.
'காலா' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து மும்பைக்கு பயணமானார் ரஜினி. இன்று காலை சிறு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதை சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
தாராவி பகுதியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதால், படக்குழுவினருக்கு கடுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.