

ஜனாதிபதி ஆட்சியும், மறு தேர்தலுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில், தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே கடுமையான பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைத்தளத்தில் பலரும் எம்.எல்.ஏக்களை தனியாக பேருந்தில் அழைத்துச் சென்றது உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசியல் விஷயங்கள் குறித்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
முக்கியமான கருத்துகள் பலவற்றை ரீ-ட்வீட் செய்து வருகிறார் அரவிந்த்சாமி. நேற்று கல்வியமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்துகளுக்குக் தன்னுடைய பதிலைத் தெரிவித்திருந்தார்.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களுக்கு விருப்பமான வேட்பாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தயவு செய்து யாரையும் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தாதீர்கள். தகுதி மற்றும் உண்மையின் அடிப்படையில் மட்டும் ஒருவரைப் பற்றி விவாதியுங்கள்.
எம்.எல்.ஏக்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது, தனிமைப்படுத்தப்படுவது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு சரியான தீர்வாகும்? ஜனாதிபதி ஆட்சியும், மறு தேர்தலுமே சிறந்த தீர்வாக இருக்கும்" என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.