

இன்றைய தலைமுறைக்கு விதை மணிரத்னம் தான் என்று இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டினார்.
கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்' தற்போது தமிழ் திரையுலகிலும் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது. முதலாவதாக 2 படங்களையும், 1 வெப் சீரீஸையும் தயாரித்து வருகிறார்கள். 'மேயாத மான்', 'மெர்குரி' மற்றும் 'கள்ளச்சிரிப்பு' ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.
இந்நிறுவனத்தின் தொடக்க விழா மற்றும் படங்களின் அறிமுக விழா நடைபெற்றது. பாரதிராஜா மற்றும் மணிரத்னம் இருவரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் மணிரத்னம் பேசியதாவது, "இங்கு இவ்வளவு இளம் இயக்குநர்களைக் காணும் போது சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் அனைவரையும் பார்த்து பெருமையடைகிறேன். தமிழ் சினிமா எவ்வளவு வேகமாக இருக்கிறது என்பதற்கு இந்தொரு மேடை போதும். கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஒரு லெஜண்ட்டாகிவிட்டார். ஏனென்றால் அவரோடு இவ்வளவு பேர் இருக்கிறார்கள்" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பாரதிராஜா "முதல் படம் பார்த்ததிலிருந்து, கார்த்திக் சுப்புராஜ் மீது பெரிய மரியாதை உண்டு. யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் படம் இயக்கியதைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது.
இளம் இயக்குநர்களை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாரதிராஜா பெரிய சாதனையாளர் என்பார்கள். அதொரு காலத்தில் ரசனையோடு வந்தேன். இயக்குநர்களில் பலர் என்னுடைய பாதிப்பில் வந்தவர்கள் உண்டு. ஆனால், இந்த மேடையில் இருப்பவர்கள், மணிரத்னம் பாதிப்பில் வந்தவர்கள்.
எனக்கு மணிரத்னத்தை மிகவும் பிடிக்கும். அவர் மிகப்பெரிய திறமைசாலி. நிறைய பேசமாட்டார், செயலில் காண்பிப்பார். ஆனால் நான் நிறையப் பேசுவேன், செயலில் காட்டியுள்ளேனா என்பது தெரியவில்லை. நான் இயக்குநரானப் பிறகு என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் மணிரத்னம்.
'பகல் நிலவு' படம் பார்க்கப் போனேன். மணிரத்னம் படம் செய்துவிட்டாரா என்று நினைத்துச் சென்றேன். ஒரு நல்ல கதை, அவர் சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. அதற்குப் பிறகு 'நாயகன்' பார்த்துவிட்டு, முதலில் வெட்கப்பட்டேன். "நீ என்ன கிழித்தாய்.. மணிரத்னம் செய்துவிட்டாரே" என நினைத்தேன். சின்ன சின்ன முத்துக்களை எப்படி வைக்க வேண்டுமோ, அப்படி காட்சிகளை வைப்பார். அதிலிருந்து அவருடைய படங்களுக்கு ரசிகனாகிவிட்டேன். இன்றைய தலைமுறைக்கு விதை மணிரத்னம் தான்.
என்னைப் பார்த்து பிரமிப்பதாக இளம் இயக்குநர்கள் சொல்கிறார்கள். ஆனால், இன்றைய இளம் இயக்குநர்களைப் பார்த்து நான் பிரமிக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் யாரிடமும் பணிபுரியாமல், படங்கள் பார்த்து பார்த்து, சொந்த அறிவில் வளர்ந்துள்ளார். அவருடைய படங்கள் பார்த்து வியந்துள்ளேன். ஒரு கலைஞனுக்கு சுதந்திரம் வேண்டும். அவரை அனைவரும் விமர்சித்தார்கள். சுதந்திரம் இல்லையென்றால் படம் எடுத்து எதற்கு?. தவறு என்றால் விமர்சித்துக் கொள்ளலாம். ஆனால் கட்டுப்படுத்த கூடாது. கோடுகளைத் தாண்டியவன் தான் கலைஞன். அவனுக்கு இலக்கணமே கிடையாது.
'இறைவி' படத்தில் என்ன தவறு பண்ணிவிட்டார்?. பிரமாதமாக செய்திருந்தார். எப்படி 'இறைவி' என்ற தலைப்பைப் பிடித்தார் என்று தெரியவில்லை. வித்தியாசமான மனிதர்களை தன் பக்கம் இழுத்து, கருத்துச் சொல்லவேண்டும். அதை தலைப்பிலே சொன்னார். அது தான் 'இறைவி'. அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக நடித்திருந்தார். இவரா நடிக்கிறார் என்று நினைத்தேன்.
இளம் இயக்குநர்கள் தற்போது புதிய வழியை உருவாக்கி போய் கொண்டிருக்கிறீர்கள். அற்புதமாக இருக்கிறது" என்றார்.