

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ்.
'துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து விஜய் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சமந்தா, சதீஷ் மற்றும் பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார். ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் படத்தினை தயாரித்து வருகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பெங்காலி நடிகர் தோட்டா ராய் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தோட்டா ராய் வில்லனாக நடிக்கவில்லை என்றும் அவர் சிறுவேடத்தில் மட்டுமே நடித்து இருக்கிறார் என்று கூறினார்.
வில்லனாக தற்போது இந்தி முன்னணி நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் தளம் மூலம் உறுதி செய்திருக்கிறார்.
இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ், "ஆம். நீல் எனது படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.
இந்தியில் 'New York', '7 Khoon Maaf' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீல் நிதின் முகேஷ்.