பட அதிபர் மீது நடிகை மோசடி புகார்

பட அதிபர் மீது நடிகை மோசடி புகார்
Updated on
1 min read

ரூ.20 லட்சம் மோசடி செய்துவிட்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக படத் தயாரிப்பாளர் மீது நடிகை ராதா, புகார் கொடுத்துள்ளார்.

‘சுந்தரா டிராவல்ஸ்’ உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா (வயது 30). இவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். சென்னை காவல் ஆணையரிடம் ராதா வெள்ளிக்கிழமை புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

2008-ம் ஆண்டு பைசூல் என்பவர் எனக்கு அறிமுகமானார். தான் சினிமா படங்கள் தயாரித்து வருவதாகவும், பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருவதாகவும் அவர் என்னிடம் கூறினார். விரைவில் புதிய படம் தயாரிக்கப்போவதாக கூறி, அந்த படத்துக்கு என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அதற்கு ரூ.10 ஆயிரம் முன்பணமாக கொடுத்தார்.

பின்னர் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். என்னை திருமணம் செய்வதாக கூறி என்னிடம் பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டார். இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்தோம்.

ஒரு முறை தொழிலில் நஷ்டம் அடைந்துவிட்டதாக கூறி ரூ.12 லட்சம் வாங்கினார். எனது வீட்டை விற்று அவருக்கு பணம் கொடுத்தேன். பின்னர் எனது நகையை அடகு வைத்து ரூ.8 லட்சம் கொடுத்தேன். என்னை ஒருமுறை ஆபாசமாகவும் செல்போனில் படம் பிடித்தார். இந்நிலையில் அவருக்கு வேறு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பது எனக்கு தெரிந்தது.

என்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டபோது என்னை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதாக கூறுகிறார். எனது பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அவரிடம் நான் இழந்த ரூ.20 லட்சம் பணத்தை மீட்டு தருவதுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு ராதா கூறினார்.

இது குறித்து பைசூலிடம் கேட்டபோது, “நான் திருச்சியில் இருக்கிறேன். எனது வழக்கறிஞர் மூலம் நான் பின்னர் பதில் கொடுக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in