Last Updated : 15 Oct, 2013 09:48 AM

 

Published : 15 Oct 2013 09:48 AM
Last Updated : 15 Oct 2013 09:48 AM

விமர்சனம் - வணக்கம் சென்னை

லண்டன் தமிழ்ப் பெண்ணான அஞ்சலிக்குப் புகைப்படக் கலை மீது தீராத காதல். தென்னிந்திய கலாச்சாரத்தை புகைப்படங்களில் ஆவணப்படுத்தி, சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் வெற்றிபெற நினைக்கிறார். அப்பாவின் எதிர்ப்பையும் மீறி, கேமராவைத் தூக்கிக்கொண்டு சென்னை வருகிறார். வந்த இடத்தில், முன்பின் தெரியாத இளைஞரான அஜயுடன் ஒரே அபார்ட்மென்ட்டில் தங்கும் சூழ்நிலை. இதனால் மோதலில் தொடங்கும் இவர்களது தவிர்க்க இயலாத நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலில் இணைய முடியாதபடி இரண்டு கதாபாத்திரங்கள் குறுக்கே வர, அதையும் மீறி இருவரும் இணைந்தார்களா என்பதுதான் திரைக்கதை.

கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளோடு, பார்வையாளர்களை ஒன்ற வைத்ததில் கிருத்திகாவுக்கு வெற்றி. படமாக்கிய விதம் கவனிக்கவைத்தாலும் கதையும் திரைக்கதையும் பெரிதாக ஈர்க்கவில்லை. நாயகனும் நாயகியும் முதலில் மோதிக்கொள்வது, பிறகு நாயகனுக்குக் காதல் வருவது, காதலிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள விஷயம் தெரிந்த பிறகு உருவாகும் சிக்கல், பிறகு வழக்கம்போல் நாயகிக்கும் நாயகன் மீது காதல் வருவது... முதல் படத்திலேயே இவ்வளவு பழைய கதையை எடுத்திருக்க வேண்டுமா?

ஒரு சில காட்சிகள் ரசிக்கவைக்கின்றன. ஏர்போ ர்ட்டில் வந்து இறங்கி கால்-டாக்ஸியில் வரும்போது, டிரைவர் ‘குதர்க்கமான’ பாடலை காரில் ஒலிக்கவிடும் காட்சியில் அஞ்சலியின் ரியாக்‌ஷனில் பெண் இயக்குநர் என்பதற்கான முத்திரையை பதிக்கிறார் கிருத்திகா. ஆண்களிடையே அதிகமாக இருக்கும் ஆதிக்க உணர்ச்சியை, அஜய் கதாபாத்திரம் வழியாக வெளிப்படுத்திய விதமும் அருமை. நாயகன் அஞ்சலியைத் தன் கிராமத்துக்கு அழைத்துசெல்லும் காட்சி கவித்துவமாக உள்ளது.

சென்னை, தேனி என்று வேறுபட்ட இரண்டு இடங்களை, ஒரு காதல் கதைக்கான உணர்வுடன் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் படத்துக்கு மிகப் பெரிய பலம். அனிருத்தின் இசை வசீகரிக்கிறது. ‘சென்னை கேங் ஸ்டர்’ பாடலைத் தவிர மற்ற அனைத்துப் பாடல்களும் கதையைத் தூக்கிப் பிடிப்பதில் அழகாக உதவியிருக்கின்றன. பாடல்கள் புதிய பாணி இசையும் ஒலிக் கலவையும் கொண்டிருக்கின்றன.

கச்சிதமாக நடித்திருக்கும் ப்ரியா ஆனந்த் கவர்ச்சியிலும் குறை வைக்கவில்லை. அஜயாக மாறத் தனது சேட்டைகளைக் குறைத்துக்கொண்டிருக்கிறார் மிர்ச்சி சிவா. ஆனால் காட்சிக்குத் தேவையான உணர்ச்சிகளைக் காட்ட அவர் முகம் மறுக்கிறது. இடைவே ளைக்குப் பிறகு வரும் சந்தானம் அடக்கி வாசித்திருக்கிறார். வணிக அம்சங்களை அழகியல் உணர்வோடு தர முயன்றி ருக்கிறார் கிருத்திகா. முதல் முயற்சி என்ற வகையில் பாராட்டத்தக்க விஷயங்கள் சில இருந்தாலும் பழைய கதை, புதுமை இல்லாத திரைக்கதை என்று ஏமாற்றமளிக்கிறார். ஒரு சில காட்சிகளின் சுவாரஸ்யத்துக்காகவும் ஆங்கா ங்கே பளிச்சிடும் சின்னச் சின்ன முத்திரைகளுக்காகவும் ரசிக்கலாம்.

இந்து டாக்கீஸ் தீர்ப்பு

எல்லா விதமான ரசிகர்களையும் கவருவதற்கான முயற்சி தெரிகிறது. இன்னும் மெனக்கெட்டிருந்தால் முயற்சி திருவினை ஆகியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x