

காவிரி பிரச்சினைக் காரணமாக, கர்நாடகாவில் இன்று 'இருமுகன்' திரைப்படம் வெளியாகவில்லை. விரைவில் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், காவிரியில் தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது.
இதனால் கர்நாடகாவில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. தமிழ் தொலைக்காட்சி சேனல்கள், தமிழ்நாடு பேருந்துகள் ஆகியவை நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
அந்த வரிசையில், இன்று தமிழகத்தில் வெளியாகியிருக்கும் 'இருமுகன்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.
கர்நாடகாவில் வெளியாகாததால், 'இருமுகன்' வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.