

'கட்டப்பாவ காணோம்' படத்தில் வரும் மீன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
மணி செய்யோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கட்டப்பாவ காணோம்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசுவாமி. வாஸ்து மீன் ஒன்று தொலைந்து போவதால் வரும் பிரச்சினைகளை மையப்படுத்தியே இப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மணி செய்யோன்.
இப்படத்தில் வரும் வாஸ்து மீன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி. முன்னணி நடிகர் ஒருவர், பிரதான கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியிருப்பதால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அனைத்து பணிகளையும் முடித்து, விரைவில் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய இருக்கிறார்கள்.