

‘விஸ்வரூபம்’ சர்ச்சை முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் உருவாக்கியது என்று கமல் காட்டமாக தெரிவித்துள்ளார்.
கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் 'விஸ்வரூபம்'. கமல் இயக்கி, தயாரித்திருந்தார். இப்பட வெளியீடு சமயத்தில் கமல் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார்.
முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறியதால், பலரும் 'விஸ்வரூபம்' வெளியீட்டிற்கு தடை கோரினர். பலமுறை பேச்சுவார்த்தைக்குப் பிறகே வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் 'விஸ்வரூபம்' பிரச்சினைக் குறித்து பேசியுள்ளார் கமல். அதில், "விஸ்வரூபம்’ பிரச்சினையை மொத்தமாக இஸ்லாமியர்கள் தலையில் போடக்கூடாது. என் பிரச்சினைக்காக என் அலுவலகம் வந்து பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.
‘விஸ்வரூபம்’ சர்ச்சை முழுக்க முழுக்க அரசியல்வாதிகள் உருவாக்கியது. திமுக செய்யவில்லை, காங்கிரஸ் செய்யவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் செய்தார்கள். நான் எந்த தனிநபரையும் தற்போது சுட்டிக்காட்ட விரும்பவில்லை. என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் தான் பேசுகிறேன்.
சினிமாவிலும் அரசியல் தலையீடு இருக்கிறது. அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எம்ஜிஆர் சிவாஜி இருவரும் இரு கட்சிகளில் இருந்தார்கள் என்பதற்காக அதை பாணியாக வைத்துக் கொண்டு அனைத்து நடிகர்களும் அரசியல் தரப்பில் இருக்க வேண்டியதில்லை. அதை உடைக்க வேண்டும் என்பதால் தான் நானும் ரஜினியும் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்தோம். நாங்கள் நண்பர்களாகவே இருந்து கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார் கமல்.