

'காற்று வெளியிடை' படத்துக்காக லடாக்கில் சண்டைக் காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
கார்த்தி, ஆதிதி ராவ், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'காற்று வெளியிடை'. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது படத்தின் சில முக்கிய காட்சிகளை காஷ்மீர் மற்றும் லடாக்கில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம்.
மணிரத்னம் மற்றும் சண்டை இயக்குநர் ஷான் கெளசல் லடாக்கில் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வருவதாகவும்,மிகவும் தத்ரூபமாக சண்டைக் காட்சி இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்மாத இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் காஷ்மீர் மற்றும் லடாக்கில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
"காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. சில முக்கியமான காட்சிகளை மட்டும் லடாக்கில் படமாக்க இருக்கிறார் மணிரத்னம். 'உயிரே' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இங்கு தன்னுடைய படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்" என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.